உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

கடலூர் விவசாயிகளைக் கவரும் கோழிக் கொண்டைப் பூக்கள்


சிவப்பு,​​ மஞ்சள் கோழிக் கொண்டைப் பூக்கள்.
கடலூர்:
 
                   மல்லிகை,​​ முல்லை,​​ ரோஜா என மணம் வீசும் மலர்கள் மங்கையர் சூடிக் கொள்வதாலும் மாலைகளை அலங்கரிப்பதாலும் பெருமைப்படுகின்றன. ஆனால் வாசமில்லா மலர்கள் பல,​​ அவற்றின் கண்கவர் அழகு காரணமாக,​​ மாலைகளில் மற்ற மலர்களுடன் சேர்த்துத் தொடுக்கப்படுவதால் பெருமைப்படுகிறது. அந்த வரிசையில் முக்கிய மலராகக் கருதப்படுகிறது கோழிக் கொண்டை செடியின் பூக்கள்.​
 
                       கிரேக்க மொழியில் இருந்து வந்த இச்சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள்.​ கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமன்றி,​​ மஞ்சள்,​​ ஆரஞ்சு நிறங்களிலும் கிடைக்கின்றன. சிவப்பு ரோஜா மாலைகளில் இடையிடையே கோழிக் கொண்டை பூக்களும் சேர்த்து தொடுக்கப்பட்டு,​​ ரோஜா பூவைப் போன்ற தோற்றத்தையும் அந்தஸ்தையும் கோழிக் கொண்டப் பூக்கள் பெற்றுவிடுகின்றன.​ பல வண்ண மாலைகளில் கண்ணைக் கவரும் சிவப்பு,​​ மஞ்சள்,​​ ஆரஞ்சு நிறங்களுக்காக கோழிக் கொண்டைப் பூக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.மேலும் கோழிக்கொண்டை பூக்கள் 8 நாள்கள் வரை வாடாமல் இருப்பதும் அதன் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்று பூக்கடைக் காரர்கள் தெரிவிக்கிறார்கள்.​ ​ சேவற்கோழியின் கொண்டை போன்ற தோற்றமும் நிறமும் இருப்பதால்,​​ இப்பூக்கள் கோழிக் கொண்டை பூக்கள் எனப் பெயர் பெற்றுள்ளன.​ மேலை நாடுகளில் கோழிக் கொண்டை பூக்கள் பூங்கொத்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.​ ​
                         
                            கோழிக்கொண்டைச் செடிகள் கீரை வகையைச் சேர்ந்தவை.​ உலகம் முழுவதும் வெப்பப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.​ வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும் தன்மை கொண்டது.​ வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது.தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலும்,​​ கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு,​​ மலர்கள் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.​ ​ மற்ற மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.​ குறைந்த தண்ணீர் செலவு,​​ குறைந்த பராமரிப்பு சாகுபடி முறையால் கோழிக்கொண்டை செடிகள்,​​ விவசாயிகளைக் கவரத் தொடங்கி இருக்கின்றன.​ தற்போது கடலூர் மாவட்ட விவசாயிகளும் கோழிக் கொண்டை பயிரிடத் தொடங்கி இருக்கிறார்கள்.​ 

                       ​கடலூரை அடுத்த நாணமேடு,​​ ராமாபுரம் பகுதிகளில் இந்த ஆண்டு கோழிக் கொண்டை செடிகள் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளன.​ திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து கோழிக்கொண்டை பூக்களைத் தருவித்து வந்த கடலூர் மலர் வியாபாரிகள்,​​ தற்போது கடலூரிலேயே இப்பூக்களை வாங்கத் தொடங்கி உள்ளனர்.விவசாயிகள் கோழிக் கொண்டைச் செடிகளைப் பயிரிடுவதற்கு முன்பே,​​ பூ வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூரில் கோழிக் கொண்டை பூக்களின் விலை சாதாரணமாக கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை இருக்கும்.​ ஆனால் சில காலங்களில் கிலோ ரூ.200 வரைகூட உயர்ந்து விடும் என்று பூ வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.இதுகுறித்து கடலூர் தோட்டக்கலைத் துறை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,​​ பூக்கடைக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் மட்டுமே கோழிக் கொண்டை செடிகளைப் பயிரிட முடியும்.​ கீரை வகையைச் சேர்ந்ததாக இருப்பதால் விதையைக் கொண்டு செடிகளை எளிதில் உற்பத்தி செய்து விடலாம்.​ 3 மாதப் பயிரான கோழிக்கொண்டை வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.​ ஹெக்டேருக்கு 10 டன்கள் வரை பூக்கள் கிடைக்கும்.​ அதிக செலவு இன்றி ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றார்.​ ​மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவதால்,​​ இப்பூக்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தால்,​​ நல்லதொரு பணப்பயிராக கோழிக்கொண்டையை மாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்து.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior