பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம்., பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி), பி.ஓ.டி. ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இந்த ஆண்டு முன்கூட்டியே கவுன்சலிங் நடத்த மருத்துவம் சார்ந்த கல்விக் குழு முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு) ஆகியவற்றில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க இந்த ஆண்டு மே மாத இறுதியில் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. ஜூன் இறுதி வாரம் கவுன்சலிங் தொடங்குகிறது. இதேபோன்று பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் மே இறுதியிலேயே விண்ணப்பத்தை வழங்கி, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுடன் இணைந்து கவுன்சலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநரும், மருத்துவம் சார்ந்த கல்விக் குழுவின் இயக்குநருமான டாக்டர் எஸ்.விநாயகம் தெரிவித்தார்.
"எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சலிங் முடிந்து, பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட படிப்புகளுக்கு செப்டம்பர் மாதம்தான் கடந்த பல ஆண்டுகளாக கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதனால் உரிய நேரத்தில் மாணவர்கள் சேர முடியாமல், பி.பி.டி., பி.ஃபார்ம். உள்ளிட்ட படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் அதிக அளவுக்கு காலியிடங்கள் ஏற்படுகின்றன. காலியிடங்கள் மற்றும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் நிர்வாகச் சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவம் சார்ந்த கல்விக் குழு ("ஃபார்மா போர்டு') என மருத்துவம் சார்ந்த படிப்புகளை நிர்வகிக்க தனிக் குழு ஏற்படுத்தப்பட்டது. சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இந்த கல்விக் குழு கடந்த கல்வி ஆண்டில் (2009-10) மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.கிங் ஆராய்ச்சி மையத்தில் கவுன்சலிங்: இந்த கல்விக் குழு இந்த ஆண்டு முதன்முறையாக மே மாத இறுதியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோக தேதி குறித்து அறிவிக்கும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்களைப் போன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.பி.டி.
(ஃபிஸியோதெரப்பி), பி.ஓ.டி. ஆகிய படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கவுன்சலிங் ஜூன் மாத இறுதியில் நடைபெறும்போதே, பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.பி.டி. உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்தில் கவுன்சலிங் நடக்கும்'' என்றார் டாக்டர் எஸ்.விநாயகம்.
downlaod this page as pdf