கடலூர்:
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையிலும், ரயில்கள் இயக்கப்படுவதில் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திவரும் காலதாமதம், பொதுமக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. நீள அகல ரயில்பாதைத் திட்டம் சுமார் ரூ. 300 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அகலப்பாதை திட்டத்துக்காக விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 2006 டிசம்பரில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. 2007 ஜனவரி முதல் அகலப் பாதை பணிகள் தொடங்கப்பட்டன. அகலப்பாதைப் பணிகள் முடிவுற்று, ஒரு மாதத்துக்கு முன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் அறிக்கை அளித்துள்ளார். இந்த மார்க்கத்தில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கிச் சென்ற அவர், விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 70 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றும் தெரிவித்து இருப்பதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே முதல்கட்டமாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமாவது இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14), விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதை தொடக்கவிழா நடைபெறும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்தார். ஆனால் இன்னமும் ரயில்கள் இயக்கப்படவில்லை.காரணம் என்ன? தொடக்க விழாவுக்கு ரயில்வே அமைச்சர் வருவதற்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், பணிகள் முடிவடையவில்லை, அதற்காக ஆர்.வி.என்.எல். நிர்வாகம் மேலும் 15 நாள் கால அவகாசம் கேட்டு இருக்கிறது என்றும் பலவாறாகக் காரணங்கள் கூறப்படுகிறது.அகலப்பாதையில் இயக்கப்படும் ரயில்களுக்கு போதிய ரயில் பெட்டிகளை ஒதுக்குவதில், தெற்கு ரயில்வே புறக்கணிக்கப்படுவதாகவும், அதுவும் ரயில்கள் இயக்குவதில் காலதாமதத்துக்குக்கு ஒரு காரணம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் ஒரு அதிகாரி தெரிவிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் - சென்னை, கடலூர் - தஞ்சை, கடலூர் - பெங்களூர் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படாததால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த மாவட்ட மக்கள் ரயில்வே துறையால் 2-ம் தர குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இப்பகுதியில் இருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றுவரும் சுமார் 1000 மாணவர்கள், குறைந்த செலவில் ரயில்களில் சென்று படித்து வந்த நிலை மாறி, கடந்த 3 ஆண்டுகளாக தினமும் பெரும்தொகையை பஸ்களுக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். கல்வி ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் இப்போதாவது ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்த பெற்றோரும் ஏமாற்றம் அடைந்து வருவதாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கவலை தெரிவித்தார்.பிளாட்பாரம் வேலை முடியவில்லை, பிளாட்பாரங்களை மக்கள் கடக்கும் பாலம் முடியவில்லை, கட்டங்களுக்கு வெள்ளை அடிக்கவில்லை, கழிவறைகள் கட்டவில்லை என்று கூறி, ரயில்களை இயக்காமல் இன்னமும் எத்தனை நாள்களுக்கு ரயில்வே நிர்வாகம் இழுத்தடிக்கப் போகிறது என்பதே கடலூர் மக்களின் கேள்வி. கடலூர் - சேலம் அகல ரயில்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு 50 சதவீதம் நிதி அளித்தது. இத்திட்டம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆனபிறகும், கடலூர் - சேலம் மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் இன்னமும் முழுமையாக இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம்.
இதற்கும் போதிய ரயில் பெட்டிகள் கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டு வருகிறது. கடலூர்- விருத்தாசலம் இடையே ஒரு பாசஞ்சர் ரயிலும், கடலூர்- திருச்சி இடையே ஒரு பாசஞ்சர் ரயிலும் மட்டுமே இயக்கப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு அதிருப்தியையும், பல நூறு கோடி முதலீடு செய்துள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதையெல்லாம் உரிய இடத்தில், உரிய நேரத்தில், உரிய முறையில் கேட்டுப் பெறுவதற்கு, கடலூர் மாவட்டத்தில் சரியான அரசியல் தலைமை இல்லாததே முக்கிய காரணம் என்று பொதுமக்களிடையே மிகுந்த மனவருத்தத்துடன் பேசப்பட்டு வருகிறது.
downlaod this page as pdf