உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சுகாதார சீர்கேடு வடலூரின் வாட்டம் போக்கப்படுமா?



  நெய்வேலி:
 
                 கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நகரம் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய திருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த வடலூர் நகரம். இன்று பல்வேறு அடிப்படை வசதிகளை பெற்றிருந்த போதிலும் பொது சுகாதாரம் சீர்கேடான நிலையில் உள்ளது.சுமார் 40 ஆயிரம் பேர் வாழும் வடலூரில் முறையான பாதாள சாக்கடை வசதி இன்னும் அமைக்கப்படாததால் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் கழிவுநீர் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கி கொசு உற்பத்திக் கூடமாக மாறிவருகிறது. 
 
                    வடலூரின் நான்கு முனை சந்திப்பில் உள்ள கடைகளின் முகப்பில் வடிகால் அமைக்கப்பட்டு, அதன் மீது என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நடைபாதையின் கீழுள்ள வடிகால் வழியாகச் செல்ல பேரூராட்சி நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் கழிவு அங்கேயே தேங்கி நிற்பதால் நான்கு முனை சந்திப்பில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் வடலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைமேடை தற்போது இயற்கை உபாதைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், நடைமேடையை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிலும் துர்நாற்றம் வீசுவதால் சிறுவர்கள் பூங்கா பக்கம் வருவதை தவிர்க்கின்றனர்.இது ஒருபுறமிருக்க வடலூர் குறுகிய சாலைகளில் என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதி மக்கள் சிலர் சாலையை ஒட்டியுள்ள வடிகாலை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
                   வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபை முன் ஏராளமான சேவார்த்திகள் தங்கியிருப்பதால் அவர்கள் போதுமான இடவசதியின்றி மரத்தடியின் கீழ் வாழும் நிலை உள்ளது. சேவார்த்திகள் விடுதியிலும் நோய்வாய்பட்டவர்களே அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்த விடுதியைச் சுற்றிலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளலார் தருமச்சாலை அருகே கூடும் பன்றிகளின் கூட்டத்தைக் கண்டால் அங்கு உணவு உண்ணவே அச்சம் ஏற்படுகிறது.சிறிய நகரமான வடலூரில் சுகாதார வசதியை எளிதாக செய்து கொடுக்கலாம். மக்கள் தொகை பெருகுவதற்குள் சுகாதாரத்தைப் பேணிக்காத்தால் வடலூர் வளமான நகரமாக திகழும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior