நெய்வேலி :
நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் மற்றும் தொழிற் சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப், பிளாக் - 4ல் உள்ள செயின்ட்பால் மெட்ரிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திடம் 6வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பள்ளியின் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால், பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் கல்வி குறித்து அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து நெய்வேலியை சேர்ந்த அரசியல் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற் பட்டதையடுத்து தற்போது 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெற்று வருகின்றனர். போராட்டத்திற்கு உறுதுணையாக அரசியல் மற்றும் தொழிற்சங்க பிரமுகர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் புகழேந்தி, எஸ்.சி., எஸ்.டி., சங்க ஆசைதம்பி, தொ.மு.ச., வீர ராமச்சந்திரன், காத்தவராயன், பா.ம.க., சக்கரவர்த்தி, பா.தொ.ச., திலகர், மா.கம்யூ., குப்புசாமி, அ.தி.மு.க., பாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் அருளானந்தராஜிற்கு பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நினைவு பரிசு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.