உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

இந்திய "கிரையோஜனிக்' தோல்வி: இதர ராக்கெட் திட்டங்களுக்குப் பாதிப்பில்லை




 
             இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் தோல்வியடைந்ததால், இதர ராக்கெட் திட்டங்கள் எதுவும் பாதிக்கப்படாது என்று இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். 
 
ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் தோல்விக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் அவர் வியாழக்கிழமை கூறியது:
 
               பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் அடுத்த சில மாதங்களில் இரண்டு தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.ஜிசாட் 5பி, ஜிசாட் 6 ஆகிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்படும். இந்த ராக்கெட்டுகளில் ரஷியாவின் 2 "கிரையோஜெனிக்' என்ஜின்கள் பொருத்தப்படும். அடுத்த ஜி.எஸ்.எல்.வி. வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்.
 
கிரையோஜெனிக் சோதனை: 
 
                 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "கிரையோஜெனிக்' என்ஜின் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.கடந்த 2007}ம் ஆண்டிலேயே இந்த என்ஜின் அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சியடைந்துவிட்டது. சோதனைகளின்போது 800 விநாடிகள் வரை ராக்கெட்டை எடுத்துச் செல்லும் திறனுடையதாக இந்த என்ஜின் இருந்தது.அதை ராக்கெட்டில் பொருத்துவதற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன்பிறகு, புதன்கிழமை காலை 11.27 மணிக்கு 29 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது.கவுன்ட்டவுன் போது கூட பிரச்னை உள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ராக்கெட்டை ஏவும்போது "கிரையோஜெனிக்' என்ஜின் வெற்றிகரமாக செயல்படவில்லை. என்ஜினில் என்ன குறைபாடு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அது சரிசெய்யப்படும். ஓர் ஆண்டுக்குள் இந்திய "கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீண்டும் செலுத்தப்படும்.மிச்சம் எவ்வளவு? கிரையோஜெனிக் என்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்க ரூ.36 கோடி செலவானது. இதே என்ஜினை வெளிநாட்டில் இருந்து வாங்க ரூ.90 கோடி செலவாகும் என்றார் ராதாகிருஷ்ணன். 
 
"கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' 
 
                 இஸ்ரோவின் தலைவராக கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்."கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதை வாசகத்தை மேற்கோள்காட்டி பதிலளித்தார். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழுவோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தொடக்க நிலைகளில் எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஆகிய ராக்கெட்டுகள் தோல்விகளிலிருந்தே முழுமையடைந்தன என்றார் அவர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior