கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைகாலத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது. கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன. இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும். ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது.
பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். கரையில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.
இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது, ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:
அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது. ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன. மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது. புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சீசன்கள் மாறியிருக்கின்றன. ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன. தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம். இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை. கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான், நார்வே, பர்மா, மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன. அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும். இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை, பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.
download this page as pdf