சிதம்பரம் :
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரை காரில் கடத்தி வந்தவர்களை சிதம்பரம் போலீசார் மடக்கி பிடித்தனர். பட்டுக்கோட்டை அடுத்த காப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுந்தரபாண்டியன்(34). மதுக்கூர் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். இவர் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் அவர்களை இதுவரை வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. பலமுறை பணம் கேட்டும் சுந்தரபாண்டியன் திருப்பி தரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கடலூர் முதுநகரைச் சேர்ந்த ஆறு பேரும் காரில் காப்பாங்காட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சுந்தரபாண்டியனை தாக்கி, அவரை கடத்தி வந்தனர். சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலன், கடலூர் எஸ்.பி.,க்கு தகவல் கொடுத்தார். பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து செக் போஸ்டுகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை அருகே வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் ஆறு பேரிடமும் சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
download this page as pdf