உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

விருத்தாசலம் அருகே பட்டா கேட்டு சாலை மறியல்: பொது மக்கள் கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் படுகாயம்

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அகற்ற முயன்ற போது பொதுமக்கள் கல் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

                          கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய வடவாடி கிராமத்தில் 50க்கும் மேற் பட்ட காலனி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இலவச பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.இந்நிலையில் பெரிய வடவாடி குளத்தின் அருகில் இருந்த ஐந்து ஏக்கர் இடத்தை தனி நபர் ஒருவர் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தார். இதை அறிந்த  காலனி மக்கள், இது புறம்போக்கு இடம், தனி நபர் எப்படி ஆக்கிரமிப்பு செய்யலாம் என கேட்டு விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று மதியம் 3.45 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

                       மங்கலம்பேட்டை இன்ஸ் பெக்டர் திருமால் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர். வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து பதில் சொன்னால் தான் கலைந்து செல்வோம் என கூறி, மறியலைத்  தொடர்ந்தனர்.டி.எஸ்.பி., ராஜசேகரன், தாசில்தார் ஜெயராமன் பொதுமக் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சமன் செய்யும் இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

                  தாசில்தார் ஜெயராமன் அதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இதற்கிடையில் டி.எஸ்.பி., ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் மறியல் செய்தவர்களை கலைக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட சிலர், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் திருமாலுக்கு முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது. சக போலீசார், இன்ஸ்பெக்டர் திருமாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்,  டி.எஸ்.பி., ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பொது மக்கள்  கலைந்து சென்றனர். மறியலால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று மாலை 3.45 மணி முதல் 5.45 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior