உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு! சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: 

                    விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்தை அறிய நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் தீர்வு ஏற்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.

                   விருத்தாசலம் அடுத்து உள்ளது இருப்பு ஊராட்சி. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த இந்த ஊராட்சிக்கு உட்பட்டு வடக்கிருப்பு, தெற்கிருப்பு, கிழக்கிருப்பு, அதியமான்குப்பம், கோவிலாங்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி சுமார் 2,500 குடும்பங்களையும், சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட பெரிய ஊராட்சியாகும்.
 
                    இருப்பு ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் தரிசு நிலம்(சர்வே எண் 157/1,2,3) உள்ளது. அதில் 40 ஏக்கர் முந்திரி தோப்பும், மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் பள்ளி, கோவில் உள்ளது. இதில் கோவிலின் எதிரே உள்ள 25 ஏக்கர் ( சர்வே எண் 157/1) காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் சமத்துவபுரம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு ஊராட்சி தலைவர் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினர்.
 
                    அதனையேற்று வருவாய் துறை அதிகாரிகள் 12 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தை கலெக்டர் மற்றும் திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சமத்துவபுரம் கட்டுவதற்கான பூர் வாங்க பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருப்பு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் இங்கு சமத்துவபுரம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி மக்களின் கருத்தை அறியுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இருப்பு ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பத்மா, கவுன்சிலர் முருகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் மணி, ஒன்றிய சேர்மன் செல்வராசு, மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ்மேரி, பி.டி.ஓ., தமிழரசி, வி.ஏ.ஓ., ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் மக்களிடம் கருத்துகளை கேட்டு வாக்கெடுப்பு நடத்தினர்.

இதுகுறித்து கம்மாபுரம் பி.டி.ஓ., தமிழரசி கூறுகையில், 

                      கூட்டத்தில் கலந்து கொண்ட 500 நபர்களில் சமத்துவபுரம் வேண்டாம் என 137 நபர்களும், வேண் டும் என 58 நபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நடுநிலை வகித்துள்ளனர். மக்களின் கருத்து குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இங்கு சமத்துவபுரம் அமைப்பதா? இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றார்.

ஊராட்சி தலைவர் பத்மா கூறுகையில், 

                       அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சமத்துவபுரம் அமைந்தால் நாம் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்பதால் சிலர் மக்களை தூண்டிவிட்டு இப்படி செய்கின்றனர். 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட் சியில் 100 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதல் தெரிகிறது என்றார்.
 
இருப்பு கிராமத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகவேல் கூறுகையில், 

                             இங்கு சமத்துவபுரம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. பொது இடத்தை ஆக்கிரமித்து வரும் சிலர் மக்களை தூண்டி விட்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எதிர்ப்பு தெரிவித்த சக்திவேல் கூறுகையில்:

                        பொது இடத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவான இந்த இடத்தில் மருத்துவமனை, பள்ளி, மாணவர் விடுதி உள்ளிட்ட ஊருக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காகதான் தடுக்கிறோம். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு பொது இடம் கிடையாது. மேலும் இங்கு நடைபெறும் அரசியம்மன் கோவில் திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது வாகனங்களை நிறுத்தவும், வேறு சில பயன்பாட்டிற்காக இந்த இடத்தை பயன்படுத்துவோம். பொதுமக்கள் நலன் கருதியே எதிர்ப்பதாக கூறினார். அரசின் திட்டமான சமத்துவபுரம் அமைக்க கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இருப்பு கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior