உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

கோவை வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் விவசாயிகளுக்கான இளங்கலைப் படிப்பு இந்தாண்டு முதல் அறிமுகம்: துணைவேந்தர்

           கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில், விவசாயிகளுக்கான பண்ணைத் தொழில் நுட்பங்கள் குறித்து இளங்கலை பட்டப்படிப்பு (பி.எப்.டெக்) இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேச பூபதி தெரிவித்தார். 

                  மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொலைநோக்குப் பார்வையில் வேளாண் தொலைதூரக் கல்வி... என்ற தலைப்பில் கலைந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ், கோவை வேளாண் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககப் பதிவாளர் வி. வள்ளுவபாரிதாசன், மதுரை வேளாண் பல்கலை. டீன் கே. வைரவன், மனையியல் பிரிவு டீன் பானுமதி, வேளாண் இணை இயக்குநர்கள் சங்கரலிங்கம், முத்துதுரை (தோட்டக்கலைத் துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில், துணைவேந்தர் பி.முருகேச பூபதி பேசியதாவது: 

                கோவை வேளாண் பல்கலைக்கழகம் 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள், 5 பயிர்ப் பாதுகாப்பு மையங்கள், 14 வேளாண் அறிவியல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 2005-ம் ஆண்டு முதல், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழியாக முதுகலை, இளங்கலை, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்படிப்புகள் மூலம் சுயதொழில் முனைவோர், குறு விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், கிராம மற்றும் நகர்ப்புற மகளிர், பள்ளிப் படிப்பை தொடர இயலாதவர்கள் உள்ளிட்டோர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக முதுகலைப் பிரிவில் எம்.பி.ஏ. (வணிக மேலாண்மை), எம்.எஸ்.சி. (சுற்றுச்சூழல் மேலாண்மை), எம்.எஸ்.சி. (கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள்) போன்ற படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

                 மேலும்,பருத்தி மற்றும் மக்காச்சோள வீரிய ஒட்டுவிதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தென்னை சாகுபடி காளான் வளர்ப்பு போன்ற தமிழ்வழிச் சான்றிதழ் பாடங்களும் நடத்தப்படுகின்றன.விவசாயிகளுக்கான பட்டப்படிப்பு அறிமுகம்: மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில், இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பம் என்ற பாடப் பிரிவு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு படித்த 30 வயது பூர்த்தியான அனைவரும் இப்படிப்பில் சேரலாம். தமிழில் கற்பிக்கப்படும். 3 ஆண்டுகளில் 6 பருவங்களில் பாடங்கள் நடத்தப்படும். விவசாயிகள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பெருக்கிக் கொள்வதோடு, பயிர் சாகுபடி முதல் அறுவடை வரையும், அறுவடை பின்சார்ந்த அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அறியும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். 

                    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் பேசுகையில், இப்பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் படிப்புகளால், கிராம மற்றும் நகர்ப்புற சுய உதவிக் குழு மகளிர் அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக காளான் வளர்ப்பு பயிற்சியில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பினால் பயிற்சி முடித்த பின்னர் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், அவர்களுக்கு மார்க்கெட்டிங் குறித்த தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் மூலம், மதுரை மாவட்டம் கரும்பு விளைச்சலில் சாதனை படைத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior