கடலூர்:
மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சாத்தியம் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் (கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர்) நெல்சாகுபடி நிலங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. 1974க்கு முன் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் (கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்) குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 1974க்குப் பிறகு கர்நாடகத்துடன் ஏற்பட்ட காவிரிநீர் தாவா காரணமாக, தமிழகத்தில் குறுவை சாகுபடி முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. குறுவை சாகுபடி நடைபெற்ற காலங்களில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பது வழக்கம். ஆனால் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி இருந்தால்தான், சம்பா சாகுபடிக்கே தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் நீர்மட்டம் 77.25 அடியாக இருந்தது. கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரி நீர்மட்டம் 45.6 அடியாகவும் (மொத்த உயரம் 47.5 அடி), கீழணை நீர்மட்டம் 8 அடியாகவும் (மொத்த உயரம் 9 அடி) இருந்தது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்தாலே கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய முடியும். எனினும் குறுவை சாகுபடி சாத்தியம் இல்லை என்றே கடலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 11,500 ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி தொடங்கி இருக்கிறார்கள்.
ஆழ்குழாய்க் கிணறுகள் உவர்நீராக மாறியிருப்பது, கடுமையான மின்வெட்டு, ஆள்பற்றாக்குறை, உரங்களின் விலையேற்றம் ஆகியவையே இதற்குக் காரணம் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.ஆள் பற்றாக்குறை, விதை நெல் பற்றாக்குறை இருப்பதாலும், வடகிழக்குப் பருவ மழையில் பயிர்கள் சேதத்தைத் தடுக்கவும், சம்பா பயிருக்கு ஜூலை 15-ம் தேதி வாக்கில் மேட்டூர் அணை திறப்பது சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பாஜக விவசாய அணித் தலைவர் காட்டுமன்னார்கோயில் கண்ணன் கூறுகையில்,
நாகை, தஞ்சை மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி பெருமளவில் தொடங்கப்பட்டும், மின்வெட்டு, ஆள் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே கடலூர் மாவட்டத்திலும் டெல்டா பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும், காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இல்லை. எனவே 1.5 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடிக்கு ஏற்றவகையில் முன்கூட்டியே மேட்டூர் அணையை திறப்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்றார்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லாததால், கடலூர் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடிக்குத் தேவையான ஏ.டி.டி. 43 ரகம் நெல் விதை மட்டுமே, வேளாண் வரிவாக்க மையங்களில் உள்ளன. அதிகம் தேவைப்படும் பி.பி.டி. உள்ளிட்ட பல ரகங்கள் இருப்பு இல்லை. போதுமான சம்பா ரக விதை நெல்களை வேளாண் துறை தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து நிலங்களிலும் முறையான மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக