உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

            புவிவெப்பம் அடைவதைத் தடுக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலும் கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன .மரங்கள் நடும் பணியை சிப்காட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கெம்ப்ளாஸ்ட், சாசன் கெமிகல்ஸ், டாக்ராஸ் கெமிகல்ஸ், டான்ஃபேக் ஆகிய தொழிற்சாலைகளை ஒட்டிய சாலையோரங்களில் மாவட்ட ஆட்சியர் மரங்களை நட்டார். 

அங்கு மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 

                   கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடப்படும். சிப்காட் தொழிற்சாலைப் பகுதிகளில் தொழிற்சாலைத் துணைத் தலைமை ஆய்வாளர் மூலமாக 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படும்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலமாக 50 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படும்.  மற்றும் வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, உழவர் மன்றங்கள், எக்ஸ்னோரா, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவும் மரங்கள் நடப்படும். நடப்படும் மரக் கன்றுகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

              தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நிலத்தில் மண் சட்டிகளையும், மூங்கில் கம்புகளையும் பதித்து, அதில் தண்ணீர் ஊற்றி வேர்களைச் சென்றடையும் வகையில் சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் வீ.தங்கராஜ், ஆய்வாளர் எம்.ராமமூர்த்தி, கெம்ப்ளாஸ்ட் முதன்மை நிர்வாகி என்.எஸ்.மோகன், சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்திரகுமார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior