உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

கடலூர் மாவட்டத்தில் கலப்படம் அதிகரிக்கும் கலப்பு உரங்கள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் கலப்பு (மிக்ஸர் உரங்கள்) உரங்களில் கலப்படம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

          வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயற்கை உரங்கள் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், விவசாயிகளிடமும் ரசாயன உரங்கள் மீதான மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து, கலப்படமும் அதிகரித்து வருகிறது. தரமற்ற உரங்களால் ஏற்படும் பாதிப்பு அறுவடையின் போதுதான் விவசாயிகளால் உணர முடிகிறது.

         வேளாண்மையில் தழைச்சத்து (நைட்ரஜன்), மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாஷ்) ஆகிய மூன்றும் பேரூட்டச் சத்துக்களாகக் கருதப்படுகிறது. இவற்றுக்கான ரசாயன உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ் உரங்கள் தனித்தனியாகவும், மூன்றையும் குறிப்பிட்ட விகிதங்களிலும் கலந்து, கலப்பு உரங்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பயிர்களுக்கு ஏற்றவாறு 14 வகையான கலப்பு உரங்களை (காம்ப்ளக்ஸ் உரங்கள்) தயாரித்து விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. 

         உரங்களை பெரிய உரத் தொழிற்சாலைகளும் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றன. அதே நேரத்தில் மிக்ஸர் உரங்கள் என்ற பெயரிலும், சாதாரண தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்க்கப்படுகின்றன. கலப்பு உரங்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகம் உள்ளன. கடலூரில் 2-ம், விழுப்புரத்தில் 25 நிறுவனங்களும் உள்ளன. இவை குடிசைத் தொழில்போல் பெருகிவருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

         பொதுவாக முக்கிய 3 உரங்களில், சாதாரண உப்பு, மணல், களிமண், டோலமைட் என்ற மண், ஜிப்ஸம், பாறை பாஸ்பேட், செங்கல்தூள், மெக்னீஷியம் சல்ஃபேட் போன்ற பொருள்கள் கலப்படம் செய்யப்படுவதாகக் கூறும் விவசாயிகள், மிக்ஸர் உரங்கள் என்று கூறப்படும் காம்ப்ளக்ஸ் உரங்களில்தான் கலப்படம் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலர் ரவீந்திரன் கூறுகையில், 

           "கடலூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் விற்பனை செய்யப்படும் மிக்ஸர் உரங்கள் கலப்படம் நிறைந்ததாகவும், தரமற்றதாகவும் உள்ளன. இந்த உரங்கள் பற்றி விவசாயிகளுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. விலையிலும் கம்பெனி கலப்பு உரங்களுக்கும் மிக்ஸர் உரங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வேளாண் துறை உரக் கட்டுப்பாடு அதிகாரிகள், மேலும் தீவிரமாக இந்த உரங்களை கண்காணித்து மாதிரிகளை சேகரித்து, தர நிர்ணய ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்கள் அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்தில், அரசு உர ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்' என்றார்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் (உரங்கள் தரக் கட்டுப்பாடு) அலுவலகத்தில் விசாரித்தபோது 

             ஆண்டுதோறும் அனைத்து ரக உரங்களிலும் மாதிரிகள் எடுத்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்புகிறோம். கடந்த ஆண்டு 750 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினோம். இதில் 25 மாதிரிகளில் மட்டும் தரக்குறைவு கண்டறியப் பட்டது. தரக்குறைவின் அளவுக்கு ஏற்ப லைசென்ஸ் ரத்து, குறிப்பிட்ட காலத்துக்கு லைசென்ஸ் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கலப்பு மற்றும் மிக்ஸர் உரங்களில் குறைபாடுகள் அதிகம் காணப்படுவதால், அவற்றில் மட்டும் 40 சதவீத மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று, வேளாண் இயக்குர் உத்தரவிட்டு இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior