உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

சிறுவனை கடத்திக்கொன்ற கொடூரனுக்கு இரட்டை மரண தண்டனை:கடலூர் மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


கடலூர்:
  
           பணத்திற்காக சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து கடலூர் மகளிர்  கோர்ட்டில் நேற்று இரவு தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி (15), சுகன்யா (14), சூர்யா (11) மகன் சுரேஷ் (7). இவர்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். சிறுவன் சுரேஷ் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

              இவர் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், சுரேஷிடம் பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறி அழைத்துச் சென்றார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், சுரேஷின் தாய் மகேஸ்வரியிடம் கூறினர். பல இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்காததால் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில் மாணவனை கடத்திச் சென்ற மர்ம நபர் அன்று இரவு மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சிறுவன் பத்திரமாக இருப்பதாகவும், ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், போலீசில் கூறினால் குழந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

              இதுகுறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், விருத்தாசலம் டி.எஸ்.பி., ராஜசேகரன் உள்ளிட்ட போலீசார் தனிப் படை அமைத்து தீவிர விசாரணை செய்தனர். அதில் மகேஸ்வரியின் தூரத்து உறவினரான கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தியின் மனைவி பாலாயி (34)யும், அவரது கள்ளக் காதலன் திருச்சி சமயபுரம் சாமுவேல் மகன் சுந்தர் (எ) சுந்தர்ராஜன் (25) என்பவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதும், இருவரும் அரியலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் இருப்பதும் தெரியவந்தது. ஜூலை 30ம் தேதி அதிகாலை போலீசார், செங்குணம் கிராமத்தில் பதுங்கி இருந்த சுந்தர்ராஜன், அவரது கள்ளக்காதலி பாலாயியை பிடித்து விசாரணை செய்தனர்.

               விசாரணையில் பணம் கேட்டு மாணவன் சுரேஷை கடத்தியதும், போலீசாருக்கு விஷயம் தெரிந்து விட்டதால், போலீசிலிருந்து தப்பிப்பதற்காக இருவரும் சிறுவன் சுரேஷை கழுத்தை நெறித்து கொலை செய்து சாக்கில் மூட்டையாக கட்டி பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி மீன்றான் குளத்தில் வீசியதை ஒப்புக் கொண்டனர்.பாலாயியின் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதால் அவரது கணவர் புகழேந்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார். அதனால் பாலாயியியும் சுந்தர்ராஜனும் சேர்ந்து குடும்பம் நடத்த பணம் தேவைப்பட்டதால் பாலாயியின் உறவினரான மகேஸ்வரியின் மகனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் வயலப்பாடி ஏரியில் சாக்கு மூட்டையில் இருந்த மாணவன் சுரேஷ் உடலை மீட்டனர். பணம் கேட்டு சிறுவனை கடத்தி, கொலை செய்து, உடலை மறைத்த சுந்தர் (எ) சுந்தர்ராஜன், அவரது கள்ளக்காதலி பாலாயி ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் கடலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக் குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் சிவராஜ் ஆஜராகி வாதிட்டார்.

                  வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன் நேற்று இரவு தீர்ப்பு கூறினார். வழக்கின் முதல் எதிரியான சுந்தர் என்கிற சுந்தர்ராஜனுக்கு, பணம் கேட்டு சிறுவன் சுரேஷை கடத்தியதற்காக மரண தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை செய்ததற்காக மரண தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை செய்து உடலை மறைத்ததற்காக ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வழக்கின் இரண் டாம் எதிரியான பாலாயி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.அதனைத் தொடர்ந்து சுந்தரை ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.


நீதிபதி அசோகன் தனது தீர்ப்புரையில் கூறியிருப்பதாவது:

               தற்கால சூழ்நிலையில் குழந்தைகளையும், பெரியவர்களையும் பணத்திற்காக கடத்துவதும், அவர்கள் பிடிபடுவதும் அல்லது எதிர் பார்த்த பணம் கிடைக்கவில்லை என்றால் கடத்தப் பட்டவர்கள் கொலை செய்யப்படுவதும் அன்றாட வாழ்க்கையில் மலிந்த குற்றங்களாக காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் இதுபோன்று பணத்திற்காக கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு மிக அதிகபட்ச தண்டனை கொடுத்து தண்டிக்காத பட்சத்தில் எதிர் காலத்தில் பணத்திற்காக பெரியவர்களையும், சிறுவர்களையும் கடத்தும் கும்பல் அதிகமாகி சமுதாயமே சீரழிந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

               இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த குற்றவாளிக்கு (1ம் எதிரி) அதிக பட்ச தண்டனை வழங்குதல் நீதிக்கு உகந்ததாக இருக்கும் என தீர்மானிக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி ஏழு வயது சிறுவனை வளர்த்து சீராட்டி பார்த்த அந்தத் தாய் மனம் பதறும் நிலையை கோர்ட்டில் காண முடிந்தது. கோர்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு பார்த்த காட்சியை யாரும் மறக்க முடியாது.எனவே, இதுபோன்ற குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தால் தான் நீதிக்கு உகந்தது என முடிவு செய்யப்படுகிறது. எனவே, இந்த குற்றவாளிக்கும் (1ம் எதிரி) இ.த.ச. பிரிவு 364 (ஏ)ன் படியான குற்றத்திற்கு மரண தண்டனை, 1,000 ரூபாய் அபராதமும், இ.த.ச. பிரிவு 302ன் படியான குற்றத்திற்கு மரண தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும், இ.த.ச. பிரிவு 201ன் படியான குற்றத்திற்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது.

             இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இந்த கோர்ட்டில் வழங்கிய மரண தண்டணையை ஐகோர்ட்டில் உறுதி செய்யும் விதமாக கு.வி.மு.ச. பிரிவு 366ன் படி இந்த கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் ஐகோர்ட்டிற்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அசோகன் தனது தீர்ப்புரையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior