உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கடலூர் மாவட்ட டெல்டா நிலங்களில் மாற்றுச் சாகுபடி: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

கடலூர்:

              கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், மாற்றுச் சாகுபடி முறையை நடைமுறைப்படுத்த, வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த நிலங்களில் பெரும்பாலும் குறுவை, சம்பா என்ற இரு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை, காவிரி நதி நீர்த் தாவா தொடங்கியதும் தலைகீழாக மாறிவிட்டது. ஒரு போகம் சம்பா நெல் சாகுபடியே கேள்விக் குறியாகிவிட்டது. கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தால் விவசாய வேலைகளுக்கும் சாதாரண விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் ஊதியத்தில், ஆள்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.

                 இதனால் விவசாயம் முற்றிலும் இயந்திரமயமாகி இருக்கிறது. இயந்திர அறுவடை காரணமாக சம்பா நெல் சாகுபடிக்குப் பின், ஊடுபயிராக உளுந்து பயிரிடப்படுவதும் சத்தியம் அற்றதாகி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை, சம்பா நெல் சாகுபடிக்குப் பின், வளமான 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் 6 மாத காலம் தரிசாகக் கிடக்கும் நிலையும், அதனால் 80 ஆயிரம் சிறு விவசாயிகள் வருவாயின்றி மாற்று வேலைகளைத் தேடி, பிறமாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலையும் உருவாகி இருக்கிறது. எனவே டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா அறுவடை முடிந்ததும் உளுந்து நேரடி விவசாயம் செய்யவும் அதற்குத் தேவையான, மிகக் குறைந்த நீரை வீராணம் ஏரியில் இருந்து விடுவிக்காலம் என்றும், விவசாயிகள் கருதுகிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் மாற்றுச் சாகுபடி திட்டத்தின் தேவை குறித்து, தினமணி செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தியின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவின் பேரில், வேளாண் விஞ்ஞானிகள் புதன்கிழமை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கூடி, முன்னோடி விவசாயிகள் முன்னிலையில் இது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

               ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல் விஞ்ஞானி பேராசிரியர் ரவி, மரபணுவியல் நெல் ஆராய்ச்சி பேராசிரியர் ஆர்.வைத்திநாதன், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் எஸ்.கீதா ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஆய்வு விவரம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின், கடலூர் மாவட்ட அமைப்புச் செயலர் பி.ரவீந்திரன் கூறியது: 

                டெல்டா விவசாயிகளின் மிக முக்கியமான இந்தப் பிரச்னை, தினமணிச் செய்தி மூலமாக, வேளாண் துறையின் கவனத்தை ஈர்த்து உள்ளது. மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, விருத்தாசலத்தில் வேளாண் விஞ்ஞானிகள் புதன்கிழமை கூடி விவாதித்தனர். தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இப்பிரச்னை எதிர்காலத்தில், மிகத் தீவிரமாக உருவெடுக்கும் என்பதைக் கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் முன் அறிவித்து இருக்கிறார்கள். மாற்றுச் சாகுபடி முறை வரவேற்கத்தக்கது என்றும், வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மாற்று சாகுபடி முறையை சோதனை அடிப்படையில், வரும் ஆண்டில் மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்து, கடலூர் மாவட்ட வேளாண் துறைக்கு பரிந்துரைத்து உள்ளனர். அதன்படி கடலூர் மாவட்ட காவிரி பாசனப் பகுதிகளான கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய 5 வட்டாரங்களில், தலா 50 ஏக்கர் வீதம் நேரடியாக உளுந்து சாகுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பா அறுவடைப்பின் மேற்கொள்ளப்படும் உளுந்து விவசாயத்துக்குத் தேவையான சிறி தளவு காவிரி நீரை வழங்க, பொதுப் பணித் துறை சம்மதித்து உள்ளது.

               3 ஆண்டுகளுக்கும் மேலாக மறுசுழற்சி முறையில் உளுந்து சாகுபடி செய்யப்படுவதால், விதை உளுந்தின் வீரியம் குறைந்து விடுகிறது. எனவே வீரியம் குறையாத விதை உளுந்தை வேளாண் துறை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்டா நிலங்களுக்கும், பருவ நிலைக்கும் ஏற்ற ஏடிடி 3 உளுந்து விதைகளை வழங்கவும், மேற்கொண்டு ஆய்வு செய்து, புதிய ரகங்களை உருவாக்கவும் வலியுறுத்தினோம். அதை வேளாண் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார் ரவீந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior