ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சென்னையில் 241, மதுரையில் 171, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா 160 என மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 11ம் தேதி வரை வழங்கப்பட்டன.
மொத்தம் 2,634 பேர் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 238 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 2,396 பேரின் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதில் 1,509 பேர் ஆண்கள்; 887 பேர் பெண்கள். எஸ்.டி., பிரிவில் 12 பேர், எஸ்.சி., அருந்ததியினர் பிரிவில் 97 பேர், எஸ்.சி., பிரிவில் 1,025 பேர், பி.சி., முஸ்லிம் பிரிவில் 87 பேர், பி.சி., பிரிவில் 628 பேர், எம்.பி.சி., / டி.என்.சி., பிரிவில் 466 பேர், இதர பிரிவில் 81 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு முதல் தொழிற்படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பில் சேருபவர்களுக்கும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் 1,331 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலர் தீனதயாளன், சட்டக்கல்வி இயக்குனர் ஜெயமணி, பல்கலைக்கழக பதிவாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் சச்சிதானந்தம் பேசியதாவது:
தேசிய அறிவுசார் நெட்வொர்க் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம், ஒரு இடத்தில் பாடம் நடத்துவதை மற்ற இடங்களிலிருந்தும் பார்க்க, கேட்க முடியும். சட்டப் புத்தகங்களை தமிழில் மறுபதிப்பு செய்ய, அரசு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. புத்தகங்கள் 3 மாதத்தில் வெளியிடப்படும். பல்கலைக்கழக சீர்மிகு சிறப்பு சட்டப் பள்ளி தேர்வில், வெளி மதிப்பீட்டிற்கு 70 மதிப்பெண், உள் மதிப்பீட்டிற்கு 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதே முறையை மற்ற சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வந்தால், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான உறவு மேம்படுவதுடன், தரமும் உயரும்.இவ்வாறு சச்சிதானந்தம் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக