உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாமல் தவிக்கும் நெய்வேலிவாசிகள்

நெய்வேலி:

             வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாத நெய்வேலி வாக்காளர்களில் பெரும்பாலானோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட நெய்வேலி நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டதால், குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்த நெய்வேலி நகரம் நெய்வேலித் தொகுதிக்கு வந்தது. 

             நெய்வேலி நகரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் சுமார் 60 ஆயிரம் பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது குறித்து அப்போதே எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடங்கியது. ஆனாலும், அவை முறையாக நடைபெறவில்லை. மேலும் வாக்காளர் சரிபார்ப்புக்கு என நியமிக்கப்பட்ட அலுவலர்கள் எவரும் வீடு தேடிச் சென்று வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக சில பள்ளி மாணவர்கள் வாக்காளர் படிவங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்று படிவங்களைக் கொடுத்ததோடு சரி.மேலும் அவ்வப்போது வாக்காளர் புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தப்படுவதாகக் கூறினாலும் நெய்வேலி நகர மக்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு முறையாக செய்யப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் அவர்களாகவே முன்வந்து படிவங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பித்தபோதும், அதன் மீது நடவடிக்கை இல்லை.

              நெய்வேலியில் வட்டம் 5 மற்றும் 6-ல் அடுக்குமாடி குடியிருப்புகளே உள்ளன. இவற்றில் நான்கு குடியிருப்புகளை கொண்ட கட்டடத்தில் 2 குடும்பத்தினர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 90 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கும் நெய்வேலியில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் 60 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களே இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் மாயமானது எவ்வாறு என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் ஆர்வமாக இருந்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அலட்சியம் காரணமாக பட்டியல் சரியாக தயாரிக்கப்படவில்லை. தற்போது விடுபட்டுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் முகாம் 9, 10 தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் பணியாவது முறையாக நடைபெறுமா இல்லை, கண்துடைப்புக்காக நடத்தப்படுமா என்பது நெய்வேலிவாசிகளின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior