உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்


சனிக்கிழமை பெய்த மழையால் சகதியாக காட்சி அளிக்கும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடலூர் திருப்பாப்புலியூர் முத்தையா நகர் - எஸ்.பி.ஐ. காலனி இணைப்புச் சாலை 
 
கடலூர்:
 
          கடலூரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பழுதடைந்து கிடக்கும் நகராட்சி சாலைகளால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
 
           கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி, 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திட்டம் எப்போது நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை வெவ்வேறு காலங்களை, ஆருடம் போல் கணித்துக் கூறி வருகின்றன. ஆனால், யாராலும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது.நகராட்சி சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, தற்போது மழைநீர் தேங்கும் குளங்களாகவும், வாய்க்கால்களாகவும், குன்றுகளாகவும், பாதாளக் கிடங்குகளாகவும் காட்சி அளிக்கின்றன. 
 
           பாதிக்கப்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, வண்டிப்பாளையம் சாலை ஆகியவை மிகுந்த போராட்டத்துக்கு இடையே அண்மையில் சீரமைக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இச்சாலைகள் புதிதாக போடப்பட்டதால், ஒலித்த குரல்கள் கொஞ்சம் குறையத் தொடங்கி உள்ளன. ஆனாலும் நகராட்சி சாலைகளின் நிலை, அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால், இந்த பரிதாபநிலை மேலும் மோசமாகி இருக்கிறது. கடலூர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரி செலுத்தும் 1.5 லட்சம் மக்களுக்கு, பாதுகாப்பான சாலைகள்கூட இல்லை என்ற பரிதாப நிலை. வரிப்பணத்தின் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. மக்கள் பணிக்கு பணத்துக்கு எங்கோபோவது என்ற நிலையில்தான் கடலூர் நகராட்சி உள்ளது என்கிறார்கள், நகராட்சி உறுப்பினர்கள்.
 
              பாதாள சாக்கடைத் திட்டத்தால் பழுதடையும் நெடுஞ்சாலைகளை சரி செய்ய திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி சாலைகளை சீரமைக்க நகராட்சிதான் பணம் ஒதுக்க வேண்டும் என்ற சங்கடம், கடலூர் நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் பரிதாபமாக காட்சி அளிக்கின்றனவே என்று அங்கலாய்க்கும் மக்களிடம், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே நிதி இல்லை, மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, சாலை வசதிக்கு எங்கே போவது என்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார். 
 
நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது 
 
               நகராட்சி சாலைகளை சீரமைக்க, பாதாள சாக்கடைத் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. நகராட்சி நிதியில் இருந்துதான் செய்ய வேண்டும். சாலைகளைச் சீரமைக்க மாநில அரசிடம் ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம். ரூ. 5 கோடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 1.5 கோடி கேட்டு இருக்கிறேன். அதுவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். வடகிழக்கு பருவ மழை தொடங்குமுன் நகராட்சி சாலைகளை சரி செய்ய முயன்று வருகிறேன் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior