
விருத்தாசலம்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே வெடிக்காத நாட்டு வெடியை வெடிக்கச் செய்த ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் பெரிய அளவிலான நாட்டு வெடி சரமாக கட்டப்பட்டு வெடிக்கப்பட்டது. இதில் இரண்டு வெடிகள் வெடிக்காமல் கிடந்தது. நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வெடிக்காத இரண்டு வெடிகளை எடுத்துச் சென்று ஆற்றில் வைத்து கொளுத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக அவை திடீரென வெடித்ததில் பாண்டியன் மகன் ஜெயகிருஷ்ணன் (10), பாண்டுரங்கன் மகன் மணிமாறன் (9), முருகானந்தம் மகன் வீரபாண்டியன் (8), பழனிவேல் மகன் பிரதாப் (14), சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மணிபாரதி ( 8) உள்ளிட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் ஜெயகிருஷ் ணன் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற சிறுவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .“இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக