உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

"தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் முத்தையவேள்"



சிதம்பரம்:
 
           தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர் ராஜா சர் முத்தையா செட்டியார் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் புகழாராம் சூட்டினார்.
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில், ராஜா சர் முத்தையா செட்டியாரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி முன்னிலை வகித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் நினைவுப் பேருரையாற்றினார். 
 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன் பேசியது: 
 
           அரசர் முத்தையவேள், அண்ணாமலையாரின் மகன் மட்டுமல்ல. அவர் தமிழ்மகன் ஆவார். மகன் தந்தைக்காற்றும் உதவிகளை எல்லாம் அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார். முத்தையவேள் தமிழ் மொழியை மனம், மொழி, மெய்யால் போற்றியவர் என்றார்.விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. துணைவேந்தர் ம.ராசேந்திரன் பெயரில் ரூ.50ஆயிரத்திற்கு அறக்கட்டளை ஒன்றை இணைவேந்தர் எம்ஏஎம் ராமசாமி நிறுவியுள்ளதாக துணைவேந்தர் எம்.ராமநாதன் விழாவில் தெரிவித்தார்.
 
           பொறியியல்புல முதல்வர் பி.பழனியப்பன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பழ.முத்துவீரப்பன் நன்றி கூறினார். விழாவில் தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் பல்கலைக்கழக இசைக்கல்லூரி சார்பில் ராஜா முத்தமிழ் மன்ற 24-ம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. பல்கலைக்கழக இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சியும், ஸ்ரீரங்கம் கலைமாமணி ரேவதிமுத்துசாமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior