சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளின் டி.டி.,யை (வரைவோலை) பெற மறுப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பண பரிமாற்றம் மூலம் லஞ்சம் அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த பத்திரப் பதிவிற்கான பதிவு கட்டணத்தை, வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரப் பதிவு செய்ய நிலம் மற்றும் மனைகளின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு தொகைக்கான பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக பெற்று, அதை, சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள், சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பின்பற்றப்படவில்லை. சேத்தியாத்தோப்பில் இந்தியன் வங்கி, பல்லவன் கிராம வங்கி, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய மூன்று வங்கிகள் உள்ளன.
சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடியில் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது. இந்த வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க மறுக்கின்றனர். மாறாக ஸ்டேட் வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என திட்டவட்டமாக கூறுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை எடுத்தால் என்ன தவறு என விளக்கம் கேட்பவர்களிடம் உங்களது பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஐந்து மாதம் கழித்து தான் கிடைக்கும் என கூறி விடுகின்றனர்.
இதனால் சேத்தியாத்தோப்பில் பத்திரப் பதிவு செய்ய வருபவர்கள் அருகில் உள்ள பின்னலூர் ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று வரைவோலை பெற வேண்டிய நிலை உள்ளது. வரைவோலை பெற சேத்தியாத்தோப்பில் மூன்று வங்கிகள் இருந்தும் கடும் அலைச்சலுக்கும் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே, சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள தக்க ஏற்பாடுகளை பதிவுத்துறை செய்ய வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக