
சேத்தியாத்தோப்பு:
கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் வேறு இடத்தில் மணல் எடுப்பதன் மூலம் வெள்ள அபாயத்தை பொதுப்பணித் துறையினரே ஏற்படுத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய வீராணம் திட்ட பாலத்தின் அருகில் மணல் எடுத்து வந்தனர். இதனால், வீராணம் திட்ட பாலம் பலவீனமாகும் நிலை உருவானது. இதுபற்றி கடந்த மாதம் (ஜூலை 12) தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீராணம் திட்ட பாலத்தின் பில்லர் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி சமப்படுத்தும் பணியினை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். இதுகுறித்தும் ஜூலை 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
மேலும் அச்செய்தியில் 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் மட்டுமே மூழ்கக் கூடிய மணல் மேட்டை கரைக்க வேண்டி அங்கு மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், பொதுப்பணித் துறையினரோ வீராணம் திட்ட பாலத்தின் பில்லர் பகுதியை மட்டும் மணல் கொட்டி மேடாக்கி விட்டு பாலத்தையொட்டி 300 மீட்டர் தூரத்தில் சமப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் மணல் எடுத்து வருகின்றனர்.
மணல் எடுப்பதிலும் கூட அரசு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தொடர்ந்து வருகிறது. மேலும் வெள்ள அபாயத்தை தடுக்க வேண்டி மணல் எடுக்க கலெக்டர் உத்தரவிட்ட பகுதிகளை அப்படியே விட்டு விட்டு வெவ்வேறு இடங்களில் மணல் எடுத்து வருகின்றனர். வெள்ளம் வந்தால் விரைவாக தண்ணீர் சூழும் பகுதியிலேயே மீண்டும் பள்ளங்கள் உருவாக்கி மணல் எடுப்பதன் மூலம் வெள்ளாற்றில் உள்ள நீர் தேக்க அணையின் ஷட்டர்களின் அடித்தளம் பலவீனமாகும். இதனை தவிர்க்க மணல் எடுக்கும் பகுதியை கலெக்டர் நேரிடையாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக