பண்ருட்டி:
பண்ருட்டியில் பஸ்சில் ஏறி பலாச்சுளை விற்க முயன்றவர்களைத் தடுத்ததால் அரசு பஸ் கண்டக்டருக்கு தர்ம அடி விழுந்தது.
வேலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு விரைவு பஸ் டி.என்.23.என்.1865 நேற்று காலை 11.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ் நிலையத்திற்குள் வந்ததும் தட்டில் பலாச்சுளை விற்கும் மூன்று வியாபாரிகள் பஸ்சில் ஏறினர். அப்போது கண்டக்டர் ஜானகிராமன் (51) பலாப்பழம் விற்பவர்களை பஸ்சில் ஏற வேண்டாம் பயணிகள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் இடையூறாக இருக்கும் என கூறினார். அதனை ஏற்காத வியாபாரிகள் மூவரும் கண்டக்டர் ஜானகிராமனிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கினர். இதனைக் கண்ட பஸ் பயணிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களும் திகைத்தனர். உடன் கண்டக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஸ் டிரைவர் பஸ்சை குறுக்கே நிறுத்தி மறியல் செய்தார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அய்யாசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.
தொடரும் அவலம்..
பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் உட்காரும் இடத்தில் தரைக் கடை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பஸ்சில் பலாப்பழம், சிப்ஸ், வெள்ளரிபிஞ்சு, கொய்யாப்பழம் ஆகியவை விற்கும் இளைஞர்கள், பயணிகளுக்கு இடையூறாக ஏறி, இறங்குவதால் ஒரு சில நேரங்களில் பயணிகளிடம் தகராறு செய்கின்றனர். ஒரு சில நேரங்களில் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்வதும் தொடர்கிறது. போலீசார் இதனைப் பற்றி கண்டு கொள்ளாதது பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் வேதனை அளிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக