கடலூர்:
முந்திரித்தோப்பில் பதுங்கியிருந்த பிரபல கொள்ளையன், போலீசாரை கண்டு தப்பியோடிய போது தவறி விழுந்து இறந்தான்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவின் பேரில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரபல கொள்ளையன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தாண்டவங்குப்பம் கலியன் மகன் கொற ரவி என்கிற ரவி (35), ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார், கொற ரவியை தீவிரமாக தேடி வந்தனர். அவர், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு முந்திரிக் காட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று மாலை சாத்திப்பட்டு முந்திரிப்தோப்பை சுற்றி வளைத்தனர். போலீசைக் கண்ட கொற ரவி தப்பியோடிய போது, முந்திரி மரக்கிளை தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த கொற ரவியை, தனிப்படை போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக கூறினார். காடாம்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக