விதை நெல் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள தகரப் பத்தையம்.
சிதம்பரம்:
பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்களை பாதுகாக்க புதிய வகை தகரப் பத்தையம் தற்போது வேளாண் இடுபொருள் சந்தைகளில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
பாரம்பரிய மரப் பத்தையங்களுக்கு மாற்றாகவும், குறைந்த செலவில் விதை நெல் மற்றும் தானியங்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த புதிய வகை தகரப் பத்தையம் தற்போது வேளாண் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய தானிய சேமிப்பு முறையில் மரப் பத்தையம் அல்லது மரக் களஞ்சியத்துக்கு மாற்றாக சிறிய அளவு வடிவமைப்பில் இந்த தகரப் பத்தையம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வகை தகரப் பத்தையத்தில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்த பின் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத நன்றாக முதிர்ந்த தானியங்களை சேகரித்து சுத்தப்படுத்தி, நன்றாக காய வைத்து பின்பு வேப்ப இலை, நொச்சி இலைகள் கலந்து தகரப் பத்தையத்தில் சேகரித்து வைக்கலாம். பின்னர் மாதம் ஒருமுறை சேமிப்பு பூச்சிகள் தாக்குதல் பற்றி கண்காணிப்புப் பணிகளை தகரப் பத்தையத்தின் உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நிலத்திலிருந்து அல்லது தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மண் தொடர்பு இல்லாதவாறு தகரப் பத்தையத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தகரப் பத்தையத்துக்கு கீழே உள்ள திறப்பு வழியாக தானியங்களை எளிதாக எடுத்து சோதித்து அறிந்து மீண்டும் தகரப் பத்தையத்தின் மேல் பகுதியின் வழியாக உள்ளே போடலாம். குறைந்த அளவு வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள இந்த தகரப் பத்தையம் குடியிருப்பு பகுதியில் இடத்தை அடைக்காது.
குறைந்தச் செலவில் அதிக காலத்துக்கு சிறு மற்றும் குறு விவசாயிகள் உணவு தானியங்களை எளிதாக பாதுகாத்து நெடுங்காலத்துக்கு தொடர்ச்சியாக சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் விவசாயிகளிடம் உள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் பாரம்பரிய நீண்ட ரக விதைகள், வட்டார அளவிலான நாட்டு ரக விதைகள், மருத்துவ குணம் கொண்ட உணவு தானிய ரகங்கள் ஆகியவற்றை தகரப் பத்தையத்தின் மூலம் எளிதாக பாதுகாக்க முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவிலான இந்த புதிய வகை தகரப் பத்தையத்தை பயன்படுத்தி பயன் பெறலாமே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக