கடலூர்:
தற்போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது.
இந்தியாவின் முக்கிய காய்கறிகளில் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் முக்கிய இடத்தை வகிக்கிறது. நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் வெங்காயம் 10.5 சதவீதம். தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ஹெக்டேரில் 3.05 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 75 சதவீதம் சின்ன வெங்காயம். கடலூர் மாவட்டத்தில் நாணமேடு, சுபஉப்பளவாடி, கண்டக்காடு, சிறுபாக்கம், எஸ்.நாரையூர், ரெட்டாக்குறிச்சி, எஸ்.புதூர் ஆகிய கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மையம், கடந்த 10 ஆண்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை நிலவரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.தனவேல், கீழ்காணும் பரிந்துரைகளை விவசாயிகளுக்கு அளித்து உள்ளார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.தனவேல் அளித்துள்ள பரிந்துரை விவரம்:
ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வெங்காய வரத்து அதிகம் இருக்கும். இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் வெங்காயத்தின் விலை, கர்நாடக வெங்காய வரவால் பாதிக்கும். எனவே தமிழக வெங்காய விவசாயிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யும் வகையில், தற்போது வெங்காய விதைப்பை மேற்கொள்ளலாம்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு விலை ஏறுமுகத்தில் இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை தகவல் மைய ஆய்வு முடிவுகளின்படி, தரமான வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை கிலோவுக்கு 13 முதல் 16 வரை இருக்கும். சுமாரான வெங்காயம் கிலோ 10 முதல் 13 வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தற்போது வெங்காயம் பயிரிடலாம். விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை விதைத்தால் பயிர் செலவு குறையும். ஆனால் இந்த வெங்காயம் சேமிக்க உகந்ததல்ல என்றும் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக