சிறுகிராமம் கிராமத்தில் உள்ள மாணவர் விடுதி. (உள்படம்) விடுதிக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தரைத் தொட்டி.
பண்ருட்டி:
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் சிறுகிராமம் மாணவர் விடுதி இயங்குவதால் அதில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிறுகிராமம் ஊராட்சியில் 3000-ம் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுகிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக, இக்கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டப்பட்டது.
இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் உள்ள 52 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.÷விடுதியைக் கட்டிய ஒப்பந்ததாரர் ஆழ்துளை கிணற்றை மிக ஆழமாக தோண்டாததால் தண்ணீரின்றி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாணவர்களின் தண்ணீர் தேவைக்காக விடுதி அருகே பெரிய தரைத் தொட்டியை கட்டி ஊராட்சி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் இருந்து மின் மோட்டார் மூலம் விடுதியின் மேல் உள்ள தொட்டியில் தண்ணீர் ஏற்றி வருகின்றனர்.
இந்தத் தண்ணீர்தான் உணவு சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பற்றச் சூழலில் திறந்த வெளியில் உள்ள இத்தொட்டியில் குப்பைகள், தவளை, பாம்பு ஆகியவை உள்ளே விழுந்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த விடுதியில் சுற்றுச் சுவர் இல்லாததால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் சமூக விரோதிகளால் மாணவர்களின் பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுகிறது.÷விடுதிக்கு செல்ல சரியான வழி இல்லை.
இருக்கும் வழியிலும் களிமண் கொட்டப்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். விடுதியின் வெளியே உள்ள சோடியம் விளக்கு பல வாரங்களாக எரியவில்லை எனவும், இதனால் இருள் சூழ்ந்த பகுதியில் தங்கி இருப்பதாகவும், விடுதியில் இரவு காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லை எனவும் மாணவர்கள் கவலைப்படுகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், மின் விளக்கு, சாலை வசதி, இரவு காவலர் ஏதுமின்றி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விடுதி தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக