கிள்ளை :
சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், 10 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள பூச்செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர், மண்டபம், அம்புபூட்டியப்பாளையம், கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, சாலக்கரை, ரயிலடி சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் வயல்களில் பூந்தோட்டம் அமைத்துள்ளனர். இதில் கனகாம்பரம், குண்டுமல்லி, அரும்பு, சாமந்தி, காக்கட்டான் உள்ளிட்ட மலர் வகைகளை சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதியில் உற்பத்தியாகும் பூக்களை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி, வடலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் பதியம் போடும் முன்னரே முன்பணம் செலுத்தி, சீசன் நேரத்தில் பூக்களை கொள்முதல் செய்து கொள்வது வழக்கம். இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் மலர் உற்பத்தி செய்து வருகின்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டு முன்பணம் கொடுத்தனர். தற்போது சி.முட்லூர் சுற்றுப்பகுதி கிராமங்களில், 10 ஏக்கருக்கும் மேல் மலர் உற்பத்தி செய்துள்ள நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பூந்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால், செடிகள் அழுகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக