சுத்துக்குளம் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாய் கிடப்பதைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்தும், இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர்
கடலூர்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூர் அருகே பாலம் கட்டாததால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும், சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் நாற்று நட்டும் போராட்டங்கள் நடத்தி தங்களின் எதிர்ப்பை ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தினர்.
கடலூரை அடுத்த சுத்துக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுத்தெரு, புதுத்தெரு பிரதானச் சாலையை சீரமைக்க வேண்டும். நாரை குளத்தில் இருந்து வெளியேறும் நீரால் போக்கு வரத்து பாதிப்பைத் தடுக்க, தரைப்பாலம் கட்ட வேண்டும். முதுநகர் ரயில்வே கேட் அருகே பெரியார் நகரில் தரைப்பாலம் கட்ட வேண்டும். சான்றோர் பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களைச் சரி செய்ய வேண்டும்.
பீமாராவ் நகர் பகுதியில் தெருக்களைச் சீரமைக்க வேண்டும். மணக்குப்பத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் பழுதடைந்து சேறும் சகதியுமாக உள்ள சுத்துக்குளம் சாலையில் நாற்று நட்டும், மணக்குப்பம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும் போராட்டம் நடத்தினர்.
போராட்டங்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.மணிவண்ணன், சுரேஷ், ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் நேதாஜி, சிவானந்தம், வேல்முருகன், பி.தனுசு, காமராஜ், சந்திரசேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக