உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

சம்பா நடவுப் பணிகள் பாதிப்பு

கடலூர்,நவ.7:

கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து சனிக்கிழமை மாலை வரை இடைவிடாமல் அடைமழை பெய்துகொண்டு இருந்தது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய கனமழை சில நிமிடங்கள்கூட விடாமல் தொடர்ந்து அடைமழையாக பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பல பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மீனவர்கள் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்ல வில்லை.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 107 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. சனிக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பதிவாகி இருக்கும் மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:
கடலூர் 107, வானமாதேவி 91.4, புவனகிரி 90, சிதம்பரம் 79, அண்ணாமலை நகர் 71.2, கொத்தவாச்சேரி 60, பரங்கிப்பேட்டை 49, பண்ருட்டி 45, குப்பநத்தம் 39, லால்பேட்டை, மேமாத்தூர் தலா 35, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம் தலா 33, ஸ்ரீமுஷ்ணம் 25, சேத்தியாத்தோப்பு 24, வேப்பூர் 16, பெலாந்திரை 15, லக்கூர் 14, காட்டுமயிலூர் 13, கீழ்ச்செறுவாய், தொழுதூர் தலா 6.
கொள்ளிடம் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. எனினும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு 817 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் 76 கனஅடி சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது. 587 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரியின் நீர் மட்டம் 43.5 அடியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.
மற்ற நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 8 அடி. (மொத்த உயரம் 9 அடி) அணைக்கு வரும் 1,372 கன அடி நீர் முழுவதும் கடலில் திறந்து விடப்படுகிறது. வாலாஜா ஏரி நீர்மட்டம் 4.2 அடி (மொத்த உயரம் 5.5 அடி.) பெருமாள் ஏரி நீர்மட்டம் 5 அடி (மொத்த உயரம் 6.5 அடி). கோமுகி அணை நீர் மட்டம் 33 அடி. (மொத்த உயரம் 46 அடி). மழை குறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் (1.5 லட்சம் ஏக்கர்) 40 சதவீதம் நிலங்களில் நாற்று விட்டு 20 முதல் 30 நாள்கள் வரை ஆகி இருக்கிறது.
மற்ற பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் மற்றும் நாற்று நடவுப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும்தான் நாற்றங்கால் பணிகளை பல விவசாயிகள் தொடங்கினர். மேலும் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை, வடகிழக்குப் பருவமழை காலத்தில் 43.5 அடிக்கு மேல் உயர்த்துவது இல்லை. ஏரியின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்க வேண்டும் என்றார்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், டெல்டா பாசனப் பகுதிகளில் பெரும்பாலான நிலங்களில் நாற்றங்கால் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கடைமடைப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் நடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாற்றங்கால்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன. நடவுக்காக எடுத்து வைக்கப்ட்டு இருந்த நாற்றுக் கட்டுகள் வெள்ளத்தில் அடித்துக் செல்லப்படுகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்றார் ரவீந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior