உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

வெள்ளத்தைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படுமா?

சிதம்பரம்,நவ. 9:

கடலூர் மாவட்டத்தில் மழைக்காலத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு தாலுகாக்களில் 1 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைகிறது. தமிழக அரசும் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததே காரணம். பல வடிகால்கள் புறநகர்களாக மாறிவிட்டன. மேலும் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1.44 டிஎம்சியாக இருந்தது. தற்போது தூர்ந்து போய் 0.96 டிஎம்சிதான் ஏரியில் நீர் தேக்கி வைக்க முடியும். சென்னைக்கு குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பெல்லாம் பருவமழை தொடங்கும் முன்பு ஏரியில் உள்ள நீரை முற்றிலும் பாசனத்திற்கு திறந்து விடுவது வழக்கம். தற்போது சென்னைக்கு குடிநீர் அனுப்ப வேண்டும் என்பதால் ஆண்டு முழுவதும் ஏரியில் 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.5) நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் பருவமழை தொடங்கும் போது கூடுதலாக வரும் உபரி நீர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு கூடுதலாக வரும் நீர் ஆகியவை சிதம்பரம் நகரின் தெற்கு, வடக்கு பகுதி வழியாக கடலில் கலக்கும் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் சிதம்பரம் நகரைச் சூழ்ந்து குட்டித்தீவு போல் ஆக்கிவிடுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கே அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் சாலையின் குறுக்கே சிறுபாலங்கள் கட்டி வடிகால்கள் அமைக்கப்படவில்லை.
ஆதலால் மழைநீர் வடியாமல் ஏரிபோல் காட்சியளிக்கிறது. மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையினரால் சரிவர தூர்வாரி மராமத்துப் பணிகள் செய்யப்படாததாலும் வெள்ள நீர் வடிய 4 தினங்களுக்கு மேலாகிறது.
வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் சிதம்பரம் நகரம் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகளா ஆட்சியர் கண்டித்தார். இருப்பினும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
எனவே ஆண்டு தோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்கள் வெள்ளத்தில் சிக்குவது, பயிர்கள் சேதமாவதும், அதற்கு அரசு இழப்பீடு வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. எனவே தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior