தமிழ்மொழி, கல்வி, வேளாண்மை ஆகிய மூன்று துறைகளுக்கு தினமணி நாளிதழில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார். பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்பரம், ஹோட்டல் சாரதாராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
வாசகர்கள் ஆசிரியரை சந்திப்பதைக் காட்டிலும், ஆசிரியர் வாசகர்களை சந்திப்பதில் பெருமையாகக் கருதுகிறேன். எழுத்து என்பது சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும்,நாளைய சமுதாயத்திற்கு பயனுடையதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் அர்த்தம் இருக்காது. பொழுதைத்தான் வீணடிக்கும். எனவே, எழுதுகின்ற எழுத்தின் உயிர்ப்பும், சிந்தனையை தட்டி எழுப்புகின்ற கருத்துகளும் இருக்கவேண்டும். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான கருத்துகளை பதிவுசெய்வது எங்களது நோக்கமல்ல. பத்திரிகை என்பது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற கண்ணாடி. அப்போதுதான் சமுதாயத்திற்கு பயன் ஏற்படும். தவறை திருத்தக் கூடிய பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பல லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த நிர்வாகத்தினர் தவறை திருத்தவேண்டும். அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கும், நிர்வாக இயந்திரத்திற்கும் நற்பெயர் கிடைக்கும் என கருதுவதால், சமுதாயத்திற்கு பயன்படும் கருவியாக தினமணி செயல்படுகிறது. நாளைய ஆட்சியாளர்கள் மாறினாலும், தினமணி கண்ணாடியாகத் தான் இருக்கும். சமுதா யத்தில் நடைபெறும் தவறுகள் களையப்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தினமணி செயல்படுகிறது. நாளைய சமுதாயத் தலைமுறையினர் நன்மைக் கருதி அவர்களுக்கு சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணியை தினமணி செய்கிறது.÷விவசாயம் குறைந்துவருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.தன்னிறைவு தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது முன்னோர்கள் கண்டறிந்த விஷயம்.விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருவதாக கருதுகிறேன். இதற்கு முன்னேற்பாடு தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இதைப்பற்றி சிந்திக்கவேண்டிய கடமை உள்ளது.÷உயர் கல்வி பயில மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தினமணியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதுபெரும் தலைவர் ஜே.சி. குமரப்பாவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைவரும் மறந்துவிட்ட நிலையில் அவரது பொன்விழா நினைவு நாளை தினமணி சார்பில் கொண்டாடவுள்ளோம் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன். முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஆனந்தநடராஜ தீட்சிதர், முன்னாள் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் ஏ.சண்முகம், தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன்,அண்ணாமலைப் பல்கலைக் கழக மேலாண் துறைத் தலைவர் எம்.பஞ்சநாதன், வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஆதிமூலம்,ஆசிரியர் வாசு, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன்,ரோட்டரி சங்க சமுதாய இயக்குநர் மணிவண்ணன்,விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன், வாசகர்கள் பாலாஜி கணேஷ், காளிதாஸ், சித்தரஞ்சன்,ராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர் கே.பாலசுப்ரமணியன்,தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக