பண்ருட்டி, நவ.28:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது உள்ளவர்கள் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு ஏதும் செய்வதில்லை என தெரிய வருகிறது. அனேக ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து வருடக் கணக்காகிறது.÷சத்துணவுக் கூடத்தையும் ஆய்வு செய்யவில்லை. பண்ருட்டி ஒன்றியத்தில் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வதால் பிரசனையாக உள்ளது. தமிழகத்திலே சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்ட இடம் காடாம்புலியூர் சமத்துவபுரம் ஒன்று தான். வசதி படைத்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. சமத்துவபுரம் பயனாளிகள் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்பவுள்ளேன். அதிகாரிகள் என்னுடன் தொகுதியை பற்றி ஆலோசனை செய்வதுவுமில்லை, ஒருங்கிணைந்து செயல்படுவதுவும் இல்லை. அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைந்து சென்று சேர வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அளித்த சுற்று வட்டார மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியை ரூ.3 கோடியாக பெற்று தந்துள்ளேன்.÷கிராமத்தில் இருந்து அதிகாரிகளை நாடி வரும் மக்கள் பிரதிநிதிகளை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்கள் உங்களை மனம் புண்படும்படியோ, மன உலைச்சல் அடையும் படி நடந்துக் கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்க நானும் முன்னிருப்பேன் என தி.வேல்முருகன் பேசினார். கூட்டத்தில் ஒன்றியப் பெருந்தலைவர் எழிலரசிரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், ரீட்டா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக