சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் விடுதியில் தங்கி பயிலுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். இவையல்லாமல் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேம்பாலத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் படுத்து உறங்குகின்றன. இதைக் கடந்து வாகனங்கள் செல்வது கடினமாக உள்ளது. மேம்பாலத்தை, அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து பல மாதங்கள் ஆகியும் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பாலத்தின் இருசந்திப்பிலும் எந்த வழியாக எந்த வாகனம் வருகிறது எனத் தெரியாமல் பல விபத்துகள் நடைபெறுகிறது.
எனவே இருசந்திப்பிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக