திட்டக்குடி :
திட்டக்குடியில் நேற்று முன்தினம் முதல் பதட்டம் நிலவி வந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேறு இடத்தில் நினைவுத் தூணை அமைத்ததால், பதட்டம் தணிந்தது. திட்டக்குடியில் கடந்த 1995ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த வதிஷ்டபுரம் சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோருக்கு நினைவு தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இளமங்கலம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப் பட்டது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பதட்டம் நிலவியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் நேற்று திட்டக்குடியில் கூடி ஆலோசனை செய்தனர். அதில் மதியம் ஒரு மணிக்கு இளமங்கலம் கிராமம் வரை நடத்த இருந்த அமைதி ஊர்வலத்தை கைவிட்டு, வதிஷ்டபுரம் காலனிக்கு செல்லும் வழியில் நினைவுத்தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்ட துணை செயலாளர் முத்தமிழ்மாறன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அன்பழகன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் திருமாறன் நினைவுத் தூணை திறந்து வைத்தார். நகர அமைப்பாளர் குமார், செயலாளர் ஜேம்ஸ், மாணவரணி செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நினைவுத் தூண் அமைப்பதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க நகரின் முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ்,தமிழ்மாறன், பெரியண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நினைவு தூணை வதிஷ்டபுரம் பகுதியில் திறந்ததால் பதட்டம் தணிந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக