உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதால் பயிர்கள் பாதிப்பு

கடலூர்:  

                       வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதற்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

                       வீராணம் விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்: வீராணம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 36 அடி. சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக  இதை 37.5 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வீராணம் ஏரியில் 36 அடி நீர் இருக்கும்போதே ஏரியின் எதிர்கரையில் (மேற்குக் கரை) இருக்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை மேலும் உயர்த்தினால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த வயல்களில், 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே பிப்ரவரி 10-ம் தேதி வரை வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது.

                                பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய மின் மோட்டார்களை மாற்ற 50 சதவீதம் மானியம் அளிக்கும் திட்டத்தில் 900 பேர் கடலூர் மாவட்டத்தில் இருந்து மனு அளித்தனர். ஆனால் 250 பேருக்குத்தான் வழங்கப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் 850 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு மானிய விலையில் வழங்க கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 20 டிராக்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்துக்கு 30-ம், கடலூர் மாவட்டத்துக்கு 10 மட்டுமே வழங்கப்பட்டது.

                        இந்த பாரபட்சமான போக்கு மாற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சமுதாயப் பணிக் குழு அமைக்கப்பட இருக்கிறது. இக்குழுவில் விவசாயிகளும் இடம்பெற வேண்டும்.÷வெலிங்டன் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மருதாச்சலம்: வெலிங்டன் ஏரி கரை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்கும் பொறியாளர்கள் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை பெறவேண்டும். பணிகள் முடிந்ததும், வாய்க்கால்களில் ஒழுங்காக ஏரி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

                         மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்புத் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.

                                     இது குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகளுடன் விவாதிக்க வேண்டும். தொலைநோக்குடன் இந்தத் திட்டம் அமைய வேண்டும். காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தாமதமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மார்ச் 30-ம் தேதி வரை மேட்டூர் அணை நீர் கிடைக்க வேண்டும். வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றும் இயந்திரங்கள் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கூடுதலாக வழங்க வேண்டும். 

             வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. இது தொடர்பாக விண்ணப்பம் செய்வோர் சீனியாரிட்டி பட்டியல் பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் குறைகள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உறுதி அளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior