கடலூர்:
போலீஸ் உடையுடன் கடலூரில் சுற்றித் திரிந்த இளைஞர் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் போலீஸôர் கடலூர்- சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்து இருந்த பையில் போலீஸ் உடைகளும், போலீஸ் உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் இருந்ததைப் போலீஸôர் கைப்பற்றினர். மேற்கொண்டு விசாரித்ததில் அவர் பெயர் ராமச்சந்திரன் (27) என்றும், நெல்லை மாவட்டம் கோட்டைக் கருங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. தான் கடலூருக்கு மாறுதலாகி வந்து இருக்கும் போலீஸ் காவலர் என்றுகூறி, கடலூர் செல்லங்குப்பத்தில் சேகர் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த 5 மாதங்களாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர் தனக்கு போலீஸ் காவலராக பணிபுரிய வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அதனால் போலீஸ் உடை அணிந்ததாகவும் தெரிவித்தார். அவரை கடலூர் முதுநகர் போலீஸôர் கைது செய்து, அவர் போலீஸ் உடையுடன் ஏதேனும் குற்றங்கள் புரிந்து உள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக