உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கடலூர் பாதாள சாக்கடை கழிவுநீர்

கடலூர்;

            கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க இருப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை தெரிவித்தார்.

            கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, கடலில் கலக்குவது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடலோர கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது. அடுத்து உப்பனாற்றில் கலக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. தற்போது கழிவுநீரை கெடிலம் ஆற்றில் கலக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குக் கடலூர் நகர மக்களும், பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

             இதற்கிடையே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்ட சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை,  நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக, நகராட்சிக்குக் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் கடலூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய நகராட்சித் தலைவர், 

             பாதாள சாக்கடை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நகராட்சித் தலைவர் தெரிவித்த ஆலோசனையை பரிசீலிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியது: 

            கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும் சில சிக்கல்கள் இருப்பதாகவும் எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இத்திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகளை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இப்பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிதம்பரம் பாதாள சாக்கடைத் திட்டம் சிதம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் | 44 கோடியில் நிறைவேற்றப்படும். இதற்கான டெண்டர் 18-ம் தேதி பிரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

              கடலூர் நகராட்சிக் குடிநீர் தொடர்ந்து சுவைகுன்றி வருவதாக தெரிவிக்கிறார்கள். எனவே பெருமாள் ஏரியில் இருந்து கடலூருக்குக் குடிநீர் கொண்டுவர ஆய்வு செய்யலாம் என்றார் அவர். அதைத் தொடர்ந்து அவர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறும் சில இடங்களைப் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய வேலூர் கோட்டத் தலைமைப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior