கடலூர்:
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் ஆகியும், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் 500 பேர், ஊதியப் பலன்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள்.
தமிழ்நாட்டில் 1970-க்கு முன்னர் அரசு உயர்நிலைப் பள்ளிகள் என்றும், மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளிகள் என்றும் இருபிரிவுகளாக இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்தபோது, அவற்றில் பணிபுரிவோரை 1-4-74 தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அவ்வாறு பணிமூப்புப் பட்டியல் தயாரித்து, முன் தேதியிட்டு பதவி உயர்வுகள் அளித்து ஊதியப் பயன்கள் வழங்கப்பட்டன.
ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு மேற்கண்ட தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றதில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் 1-4-70 தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்புப் பட்டியல் தயாரித்து, ஊதிய வித்தியாசத் தொகைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியாகி 12 ஆண்டுகள் ஆகியும் இந்தப் பணிமூப்புப் பட்டிலைத் தயாரித்து, முன்தேதியிட்டு பதவி உயர்வுகள் வழங்கி, ஊதியப் பயன்களை அளிக்க, தமிழகக் கல்வித்துறை தயக்கம் காட்டி வருவதாகவும், பல்வேறு சாக்குப் போக்குகளை தெரிவித்து வருவதாகவும், தமிழ்நாடு கல்வித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. இந்த ஊதியப் பயன்களைப் பெறத் தகுதியானவர்கள் தமிழகத்தில் 500 பேர் மட்டுமே உள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினால் அவர்களது ஓய்வூதியத்தில் சில | 100-க்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், அவர்களில் பெரும்பாலானேர் 70 வயதைக் கடந்தவர்கள் என்றும் சங்கத் தலைவர் பி.விஸ்வநாதன் தெரிவிக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக