சிதம்பரம்:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.
சிதம்பரம் நகர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மக்கள் சந்திப்பு தர்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ பேசியது:
சிதம்பரம் நகர மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கேரளம், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 40 சதவீதமும், மேற்குவங்கத்தில் 50 சதவீதமும் உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உளளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வெறும் 8.5 சதவீதமேயாகும். எனவே உள்ளாட்சிகளுக்கு தமிழக அரசு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்றும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறது. சிதம்பரம் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. நலத்திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நகராட்சி நிர்வாகத்திலிருந்து வழங்கப்படும் நிதி மக்களிடையே முறையாக சென்றடைகிறதா என்றும் கவனிப்பதில்லை.
எனவே சிதம்பரம் நகராட்சியில் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.பாலபாரதி தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.நடராஜன் முன்னிலை வகித்தார். திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக