கடலூர்:
டிராக்டர்களுக்கு கடன் வழங்குவதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி விட்டன.
இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரமாக வேளாண்மையை நம்பி இருக்கிறார்கள்.வேளாண் தொழிலுக்கு போதிய கூலி கொடுக்க முடியாத நிலை, கிராமப்புற வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ்நாட்டில் வேளாண் தொழிலுக்கு தற்போது ஆள்கள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேணாண் தொழில் இயந்திரமயமாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும், டிராக்டர்களைப் பயன்படுத்துவதிலும் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக டிராக்டர்களுக்கு கடன் கொடுப்பதைக்கூட வங்கிகள், குறிப்பாகத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்திவிட்டன என்பது, அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
இதற்கு வங்கியாளர்கள் கூறும் சமாதானம், டிராக்டர்களுக்குக் கொடுத்த கடன் வசூலாக வில்லை என்பதுதான்.ஏற்கெனவே பருவமழை பொய்த்தல் போன்ற இயற்கைச் சதிகளால் முடங்கிப் போயிருந்த விவசாயிக்கு, 75 சதவீத கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் 25 சதவீதத்தை தள்ளுபடி செய்த அரசு, 75 சதவீதத்தையும் தள்ளுபடி செய்துவிடாதா என்ற நப்பாசையும் சேர்ந்ததால், பலர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிராக்டர் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லையாம்.
இந்தியன் வங்கி 600 டிராக்டர்களுக்கும், பாரத ஸ்டேட் வங்கி 800 டிராக்டர்களுக்கும் வழங்கப்பட்ட கடன்கள் திருப்பி வரவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக வங்கிகள், டிராக்டர்களுக்குக் கடன் வழங்குவதையே நிறுத்திவிட்டதாக, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்தி நடவடிக்கை காரணமாக கடன் வசூல் தற்போது 25 சதவீதம் முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இதுகுறித்து கடலூர் டாஃபே டிராக்டர் விற்பனையாளர் கு.ராமலிங்கம் கூறுகையில்,
2008 மார்ச் மாதம் முதல் டிராக்டர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டன. 2008ல் தமிழகத்தில் எங்கள் நிறுவன டிராக்டர் விற்பனை 12 ஆயிரமாக இருந்தது. வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால், இந்த ஆண்டு விற்பனை 9,500 ஆகக் குறைந்து உள்ளது. ஆனால், டிராக்டர் தேவை குறைந்துவிடவில்லை. கடன் வழங்குவதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இடத்தை, தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிடித்துக் கொண்டன.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி குறைவு.
விவசாயிகள் பங்குத் தொகையும் குறைவு. நிதி நிறுவனங்களில் வட்டி அதிகம். விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக 30 சதவீதம் வரை செலுத்த வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து வருகின்றன. கடன் கட்டாவிட்டால் டிராக்டரை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்றார்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
"|5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்கினால் |1 லட்சம் மதிப்புள்ள ரோட்டாவேட்டர், டிப்பர் இலவசம் என்று நிறுவனங்கள் அறிவிக்கின்றன. விவசாயிகளின் பங்களிப்பை (|1.25 லட்சம் வரை) நாங்களே செலுத்திவிடுகிறோம் என்கிறார்கள். ஆனால் கடன் தொகையில் இலவசங்களின் விலையைச் சேர்த்து விடுகிறார்கள். இதனால் வரிகள் நீங்கலாக |3 லட்சம் விலையுள்ள டிராக்டர், |8 லட்சத்துக்கு விவசாயிகளின் தலையில் கட்டப்படுகிறது. கடன் சுமை விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .நலிந்து கொண்டு இருக்கும் விவசாயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகள், உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி என்று வரிக்கு மேல் வரிகளை நலிந்த விவசாயிகளின் தலையில் கட்டிவிட்டு, கடன் வசூலாவது இல்லை என்பது, விவசாய விரோத நடவடிக்கையாகத்தான் அமையும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக