உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூர் டெல்டா பகுதிகளில் குறுவை நெல் அறுவடை தொடக்கம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், குறுவை நெல் அறுவடை தொடங்கியது.

             கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும், மற்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பிபிடி, வெள்ளைப் பொன்னி, ஏடிடி 38 உள்ளிட்ட நடுத்தர கால நெல் ரகங்கள் நடப்பட்டு இருந்தன. டெல்டா பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் மூலம் பரவலாகக் குறுவை பயிரிடப்பட்டு இருந்தது.

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்கள் மற்றும் கடலூர் தாலுகாவில் ஒருசில பகுதிகளில் 1.5 லட்சம் ஏக்கரில், காவிரி நீர் முறையாகக் கிடைப்பதாக இருந்தால், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும். ஆனால் காவிரி நதிநீர் பிரச்னை தொடங்கியது முதல், குறுவை நெல் சாகுபடி டெல்டா பாசன விவசாயிகளுக்குக் கானல் நீராகிவிட்டது. 

                  இந்த ஆண்டும் கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் கிடைக்க வில்லை. சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் 12 ஆயிரம் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில் முதலில் மின்வெட்டு அதிகமாக இருந்த போதிலும், பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 17 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது.

             இதனால் ஆழ்குழாய் கிணற்றுப் பாசன வசதி உள்ள 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஆண்டு ஓரளவுக்கு தென்மேற்குப் பருவமழையும் அவ்வப்போது விவசாயிகளுக்குக் கைகொடுத்தது. கொள்ளிடம் கீழணைக்கும் வீராணம் ஏரிக்கும், அவ்வப்போது மழைநீரும் கிடைத்ததால், குறுவை நெல் சாகுபடி தொய்வின்றிக் காப்பாற்றப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

                  டெல்டா பாசனப் பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் அறுவடை முழுவீச்சில் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எய்யலூர், கீழ்புளியம்பட்டு, மோவூர் மற்றும் வீராணம் ஆயக்கட்டு பகுதிகள், ஓடாக்கநல்லூர், பூதங்குடி, வாக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை நெல் அறுவடை தொடங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி பகுதிகளில் குறுவை அறுவடை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                     டெல்டா பகுதிகளில் குறுவை அறுவடை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே மற்ற பகுதிகளில் நெல் கொள்முதல் செய்வதற்காக 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும்.÷குறுவை அறுவடையில் விவசாயிகளுக்கு, நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது 60 கிலோ மூட்டை பிபிடி நெல் ரகம் |950-க்கும், வெள்ளைப் பொன்னி |900-க்கும், ஏடிடி 38 ரகம் |650 முதல் |700 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior