உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூர் நகரவாசிகளுக்கு கலர் டி.வி. கிடைக்குமா?

கடலூர்:

           தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும், இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

             இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாலம், சிதம்பரம் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகள் தவிர, கிராமப் புறங்களிலும் பேரூராட்சிப் பகுதிகளிலும், 90 சதவீதம் மக்களுக்கு, இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் நகரப் பகுதிகளுக்கு மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. 

            கடலூர் மாவட்டத்தில் 5 கட்டமாக, 666 கிராம ஊராட்சிகளிலும் 6 பேரூராட்சிகளிலும் இதுவரை 4,50,005 இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 26,217 கலர் டிவிக்கள் விரைவில் வழங்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு விழா ஒன்றில் அண்மையில் தெரிவித்தார். ஆனால் நகராட்சி பகுதிகளில் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சரும் இதுவரை அறிவிக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

            கிராமப் புறங்களில் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதேபோல் நகராட்சிப் பகுதிகளிலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும், இலவச கலர் டிவிக்கள் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. கிராமப் புறங்களைப்போல் அல்லாமல், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும், இலவச கலர் டிவிக்கள் வழங்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

              இதுகுறித்து ஐயம் எழுந்ததன் காரணமாக, கடலூர் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும், நகரப் பகுதிகளிலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் கலர் டிவிக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்குமுன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துத் தெரிவித்தனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் என்ற வரம்பை கடைப்பிடித்தால், கடலூர் மாவட்ட நகரப் பகுதிகளில் ரேஷன் அட்டை உள்ளவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே இலவச கலர் டிவிக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இதுகுறித்து கடலூர் நகராட்சி உறுப்பினர் சர்தார் வெள்ளிக்கிழமை கூறுகையில், 

            நகராட்சிப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச கலர் டிவிக்கள் வழங்குவது என்று முடிவு எடுத்தால், கடலூரில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே கலர் டிவிக்கள் கிடைக்கும். எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கிராமப் புறங்களைப்போல், ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் கலர் டிவிக்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும் இது தொடர்பாக பட்டியல் ஒன்றையும் தயாரித்து கடலூர் நகராட்சி அணையரிடம் அளித்து இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறுகையில், 

              ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் கலர் டிவிக்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். ஆனால் அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது என்று தெரியவில்லை. எனினும் தேர்தல் அறிவிப்புக்குப் முன்னர், நகராட்சிப் பகுதிகளில் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior