உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

நெய்வேலி: காவலர் பற்றாக்குறையால் கண்காணிப்புப் பணியில் சுணக்கம்?


 
நெய்வேலி:
 
            நெய்வேலி நகரில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
 
             25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலியில் 3 போலீஸ் நிலையங்கள், 1 மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. இக் காவல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், குறைந்த அளவே காவலர்கள் இருப்பதால் சரியான முறையில் கண்காணிப்பு பணியை தொடர முடியாமல் காவலர்கள் திணறுகின்றனர். 
 
           நெய்வேலி நகர் மற்றும் வடக்குத்து, வடக்குமேலூர், தெற்குமேலூர், வாணதிராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வரை எல்லையைக் கொண்ட நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 49. ஆனால் தற்போது நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் புதிய நகர்கள் உருவாகி அப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியிலும் நெய்வேலி நகர காவல் நிலைய போலீஸôர்தான் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 
 
            இந்நிலையில் இக்காவல் நிலையத்தில் தற்போது இருக்கும் காவலர்களின் எண்ணிக்கை 35 பேர் மட்டுமே. நாளுக்குநாள் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் காவல் துறையினருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட காவல்துறை இதுபற்றி அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. மேலும் இருக்கின்ற காவலர்களையே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்துவதால் அவர்கள் இந்த போலீஸ் நிலையத்தைவிட்டு எப்போது வெளியே செல்லலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே பணிபுரிவதாக காவலர்களில் சிலர் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர்.
 
           இந்நிலையில் நெய்வேலி நகரியத்தில் பழைய குற்றவாளிகளின் கைவரிசைகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. கடைக்காரர்களிடம் மாமூல் வசூல், பெண்களின் தாலிச்சங்கிலியைப் பறிப்பது, வங்கியிலிருந்து பணம் எடுத்துவருவோரை ஏமாற்றி பணம் பறிப்பது, சாலை விதிகளுக்கு புறம்பாக வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், பெண்களை கேலி செய்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
 
இதுகுறித்து காவலர்கள் சிலர் கூறியது: 
 
                24 மணிநேரமும் ஓய்வின்றி பணி செய்தாலும், ஆங்காங்கே எங்களையும் மீறி சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாவட்ட எஸ்பியோ நெய்வேலிக்கு எதற்காக கூடுதல் காவலர் என்கிறார்? வேறு காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை நெய்வேலி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தால், அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர் என்றனர்.
 
காவலர்கள் பற்றாக்குறைக் குறித்து மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 
 
                        மாவட்ட அளவில் பண்ருட்டி தவிர்த்து பரவலாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவலர் பற்றாக்குறை உள்ளது. மற்ற காவல் நிலையங்களை ஒப்பிடுகையில் நெய்வேலி நகரில் காவலர் பற்றாக்குறை என்பது சற்று குறைவுதான். இருப்பினும் மாவட்ட அளவில் போலீஸôர் பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் காவலர் தேவை குறித்து மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். கூடுதல் காவலர்கள் வந்தவுடன் காவல் நிலைய காவலர் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior