பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில் தனிநபர் பூட்டி வைத்துள்ள கோவிலை 24 மணி நேரத்தில் திறக்க நேற்று இரவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில் ஐயனார், பிடாரி நொண்டிவீரன் கோவில் உள்ளது. கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இரண் டரை ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த சக்கரபாணி நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அரசு பள்ளி கட்டடம் கட்ட கோவில் நிலத்தை ஒதுக் கித் தரும்படி ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுத்த சக்கரபாணி, கடந்த ஒரு மாதமாக கோவிலை பூட்டி வைத்தார். இந்நிலையில் கோவில் அறங்காவலராக தன்னை நியமிக்க கோரி சக்கரபாணி இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தார். இதனை விசாரித்த இணை ஆணையர் திருமகள், சக்கரபாணியின் மனுவை தள்ளுபடி செய்து, கோவில் பொறுப்புகளையும் அதிகாரிகளே ஏற்க உத்திரவிட்டார். அதன்படி கடந்த 3ம் தேதி கோவில் பொறுப்புகளை ஏற்க சென்ற நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், உதவியாளர் முத்து ஆகியோரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க சக்கரபாணி மறுத்தார். இதனை அறிந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் கோவிலை திறக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சக்கரபாணி, இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்து வரும் மார்ச் 30ம் தேதிவரை கோவில் தர்மகர்த்தாவாக தொடர உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், தாசில்தார் பாபு, வருவாய் அதிகாரி சித்ரா மற்றும் அதிகாரிகள் கோவிலை அடுத்த 24 மணி நேரத்தில் திறக்க வேண்டும். இல்லை எனில் பூட்டை உடைத்து கோவில் திறக்கப்படும் என சக்கரபாணியிடம் தெரிவித்தனர். மேலும் இதற்கான அறிவிப்பு நோட்டீசை கோவில் மற்றும் சக்கரபாணியின் வீட்டில் ஒட்டினர். கோவிலை உடன் திறக்க வேண்டும் என 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக