திட்டக்குடி :
திட்டக்குடி அருகே பிச்சையெடுத்த சிறுவனை மீட்டு உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர்.
திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த ராயப்பன் மகன் விஜயராஜ் (13). பூ வியாபாரியான இவரது பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், உறவினர் ஆதரவில் வளர்ந்து வந்தான். இந்நிலையில் நேற்று மதியம் அகரம் சீகூர் (திட்டக்குடி பார்டர்) பகுதிகளிலுள்ள கடைகளில் பிச்சையெடுத்து கொண்டிருந்தான்.அங்கு டெய்லர் கடை நடத்தி வரும் ராஜேந்திரன், சிறுவன் விஜயராஜிடம் விபரத்தினை கேட்டு, அவனது உறவினரை சந்தித்து பேசினார். பின்னர் திட்டக்குடியிலுள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரிய பயிற்றுனர்கள் வடிவேலு, ரமேஷ் ஆகியோரிடம் அழைத்து சென்றார். அவர்களது ஆலோசனையின்பேரில் இடைச் செருவாய் வட்டார வளமையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மங்களூர் ஒன்றிய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டான். அடரி கிராமத்தில் இயங்கி வரும் இலவச உண்டு, உறைவிடப்பள்ளியில் விஜயராஜை சேர்த்தனர். சிறுவனை மீட்டு ஒப்படைத்த டெய்லர் ராஜேந்திரனை எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக