உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் இருவர் இறந்ததால் ரகளை கட்டடங்கள் நொறுக்கப்பட்டன: போலீசார் குவிப்பு

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த வெளி மாநில மாணவர்கள் இருவர் இறந்த சம்பவத்தால், மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள், வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 5,000க்கும் அதிகமான வெளி மாநில மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியில் தங்கியுள்ளனர். பல்கலையின் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த மாணவர் கவுதம்குமார் (20), சிதம்பரம் கீழத் தெரு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள காம்ப்ளக்சில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.கவுதம்குமார் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, நண்பர் கவுரவ்குமாருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, எஸ்.பி., கோவில் தெருவில், லாரி மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சக வெளி மாநில மாணவர்கள் 500 பேர், பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் கவுதம்குமார் இறந்ததாகக் கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு துணைவேந்தரை சந்திக்க, அவரது பங்களா முன்பு திரண்டனர். மறுநாள் காலை விளக்கம் அளிப்பதாக துணைவேந்தர் கூறினார். இதையடுத்து, மாணவர்கள் மறியல் செய்தனர். பின், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்றனர். வழியில் தேர்வுத் துறை அலுவலகம் மீது கல் வீசி, கண்ணாடிகளை உடைத்தனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளை சரமாரியாக தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். மருத்துவமனை முன்பு நின்றிருந்த வேன், பஸ் ஆகியவற்றையும் உடைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார்,  மாணவர்களை விரட்டி அடித்தனர்.
 
               அப்போது, போலீசுக்கு பயந்து ஓடிய மாணவர்கள், முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்தனர். ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் ஜார்கண்ட் மாநிலம் கர்சலான் மாவட்டம், கம்மாரியா ஜர்கலி பகுதியைச் சேர்ந்த காமேஸ்வர் பிரசாத் என்பவர் மகன் சுமித்குமார் (22) தண்ணீரில் மூழ்கி இறந்தார். இவரும் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
               மாணவர் சுமித்குமார் இறந்ததால் மேலும் பதட்டம் ஏற்பட்டு, மாணவர்கள் குவியத் துவங்கினர். அதையொட்டி டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பதட்டம் காரணமாக, நள்ளிரவில் மாவட்டம் முழுவதும் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
                         மாணவர்கள் தண்ணீரில் குதித்த இடத்தில் வேறு மாணவர்கள் யாராவது மூழ்கியுள்ளனரா என நேற்று காலை முதல் தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறங்கி தேடினர். இதற்கிடையே பிரச்னை ஏற்படாமல் இருக்க, இன்ஜினியரிங் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதி மாணவர்கள் அனைவரும் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.,க்கள் விழுப்புரம் மாசானமுத்து, காஞ்சிபுரம் ராமசுப்ரமணியன், கடலூர், தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு எஸ்.பி.,க்கள்,  பல்கலையில் முகாமிட்டுள்ளனர்.  அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி வளாகம், துணைவேந்தர் மாளிகை,  இன்ஜினியரிங் கல்லூரி வளாகம், நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மாணவர் சுமித்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து அண்ணாமலை நகர் போலீசார், சந்தேக மரணம் 174(1) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், பல்கலை கட்டடங்களை சேதப்படுத்தியதாக மருத்துவக் கல்லூரி காவலர் சசிக்குமார் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior