பண்ருட்டி :
பண்ருட்டியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டியில் ரயில்வேகேட் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் விழுப்புரம் -மயிலாடுதுறை இடையில் அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளாக போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருந்தது.
தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து கடந்த ஜனவரி மாதம் முதல் துவங்கியது. இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் பண் ருட்டி ரயில்வே கேட்டில் இருந்து நான்குமுனை சந் திப்பை கடந்து கும்பகோணம் சாலை வரையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
இதற்கு நிரந்தர தீர்வாக பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டாக மத்திய,மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின் பேரில் கடந்த 2007ம் ஆண்டில் ரயில்வே மேம் பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில் 10 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயார் செய்து 2007 செப்டம்பரில் மண் பரிசோதனை செய்தனர்.
பின்னர் சென்னை - கும்பகோணம் மாநில சாலை, தேசிய நெடுஞ்சாலை (நகாய்) கைமாறியதால் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில்வே பாதையில் பயணிகள் ரயில்கள் ஓடத் துவங்கினால் பண் ருட்டி முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுவது உறுதி. ஆனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன்வராததால் இந்த ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தஞ்சாவூர் நகாய் மேலாளர் அதிபதி "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:
சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்கா, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் "லூயிஸ் பெர்ஜர் அண்ட் வேக்சின்' நிறுவனம் "டிபிஆர்' சர்வே நடத்தி வருகிறது. சாலை வளைவுகள், பாலங்கள் கட்டுவது, பைபாஸ் உள்ளிட்ட பணிகளின் சாத்தியக் கூறுகள் குறித்து சர்வே மற்றும் திட்ட மதிப்பீடு செய்து வழங்குவர். சர்வே முடிவில் பண்ருட்டிக்கு பைபாஸ் கொண்டு வருவதா அல்லது ரயில்வே மேம்பாலம் கட்டுவதா என தெரியும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக