கடலூர்:
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிப்பாய் நர்ஸிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெüடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது. ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார். அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால், 19-ம் தேதி வரை விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல், அடுத்து உடல்திறன் தேர்வும், மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
downlaod this page as pdf